Published : 03 Jan 2020 09:48 AM
Last Updated : 03 Jan 2020 09:48 AM
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் அந்த அணி புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்கக்கூடும்.
இந்த டெஸ்டில் தொடக்க வீரரான பீட்டர் மலான் அறிமுக வீரராக இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் செஞ்சுரியன் போட்டியில் காயம் அடைந்த எய்டன் மார்க்ரமுக்கு மாற்று வீரராகவே பீட்டர் மலான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டவுடன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய 11 டெஸ்டில் 9-ல் வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்திருந்தது.
இதில் டிராவில் முடிவடைந்த ஆட்டம் கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றதாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 600 ரன்களுக்கு மேல் குவித்தன. முதல் இன்னிங்ஸ் முடிவடையவே 4 நாட்கள் ஆனது. இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 198 பந்துகளில் 11 சிக்ஸர்களுடன் 258 ரன்கள் விளாசி அசத்தினார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 191 பந்துகளில் 150 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 399 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருந்தது. ஆனால் அப்போது இந்த ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் அணுகியிருந்தது.
தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. இம்முறை செஞ்சுரியன் டெஸ்டில் தோல்வி கண்ட ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் கேப்டவுன் டெஸ்டில் களமிறங்குகிறது. மேலும் சமீபகாலமாக வெளிநாட்டு ஆடுகளங்களில் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வருவதால் இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
செஞ்சுரியன் டெஸ்டில் 1 மற்றும் 9 ரன்கள் மட்டுமே சேர்த்த ஜானி பேர்ஸ்டோ இம்முறை வெளியே அமரவைக்கப்படக்கூடும். ஏனெனில் ஆல்லி போப் உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக செஞ்சுரியன் போட்டியில் பேர்ஸ்டோ விளையாடும் லெவனில் இடம் பெற்றிருந்தார். தற்போது ஆல்லி போப் முழு உடற்தகுதியை எட்டி உள்ளதால் பேர்ஸ்டோ தனது இடத்தை இழக்க நேரிடும்.
முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்கிய இங்கிலாந்து அணி இம்முறை சுழற்பந்துக்கு சற்று முக்கியத்துவம் அளிக்கக்கூடும். இந்த வகையில் டாம் பெஸ் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அவர் களமிறங்கும் பட்சத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் நீக்கப்படக்கூடும்.
இதற்கிடையே வலது முழங்கையில் ஏற்பட்ட வலி காரணமாக நேற்று முன்தினம் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடவில்லை. அதேவேளையில் பீல்டிங், பேட்டிங் பயிற்சியில் ஆர்ச்சர் கலந்து கொண்டார். இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் களமிறங்குவாரா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் லெவன்
தென் ஆப்பிரிக்கா: டு பிளெஸ்ஸிஸ், டீன் எல்கர், பீட்டர் மலான், ஜுபைர் ஹம்சா, ராஸ்ஸி வான் டெர் டஸ்சென், குயிண்டன் டி காக், டுவைன் பிரிட்டோரியஸ், வெர்னன் பிலாண்டர், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே.
இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லே, ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ், ஓல்லி போப், ஜாஸ் பட்லர், சேம் கரண், டாம் பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராடு.
பிற்பகல் 2 மணி சோனி சிக்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT