Published : 01 Jan 2020 03:43 PM
Last Updated : 01 Jan 2020 03:43 PM
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்குச் சிறந்த கேப்டனாக தோனியை இஎஸ்பிஎன் கிரிக்இன்போ தளம் தேர்வு செய்துள்ளது.
மாறாக டெஸ்ட் அணிக்கு கேப்டனாக விராட் கோலியைத் தேர்வு செய்துள்ளது கிரிக்இன்போ தளம். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 3 இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் நிலையாக தோனியும், கோலியும் இடம் பெற்றுள்ள நிலையில், ரோஹித் சர்மா ஒருநாள் அணியிலும், டி20 போட்டியில் பும்ராவும் இடம் பெற்றுள்ளனர்.
இஎஸ்பின் கிரிக்இன்போ குழுவில் மொத்தம் 23 பேர் கொண்ட குழு இந்த அணியைத் தேர்வு செய்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்யும்போது வீரர்கள் குறைந்தபட்சம் 50 டெஸ்ட் போட்டிகளில் அல்லது 6 ஆண்டுகள் விளையாடி இருக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளில் 75 ஒருநாள் போட்டிகளிலும், டி20க்குத் தேர்வு செய்யும் போது 100 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்ற தகுதியின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறந்த ஒருநாள் அணி
கடந்த 10 ஆண்டின் சிறந்த ஒருநாள் அணிக்கான வீரர்கள் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் அணிக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவும், ஒன்டவுனில் விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவும், அம்லாவும் தங்களின் அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்கி பல போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளதாலும், 2-வது மற்றும் மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மாவும், அம்லாவும் இருப்பதால் தொடக்க ஆட்டக்காரர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். 3-வது வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4-வது வீரராக ஏபி டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வான்டரர்ஸ் மைதானத்தில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 149 ரன்கள் சேர்த்து ஒருநாள் அதிவேக சதம் அடித்தார் டிவில்லியர்ஸ். அந்த அடிப்படையில் வலுவான நடுவரிசைக்காக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5-வது இடத்துக்கு இங்கிலாந்து ஜோஸ் பட்லர், நியூஸிலாந்து வீரர் ரோஸ் டெய்லருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், ரோஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார். விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள், டி20 அணியை சூழலுக்கு ஏற்றார் போல் வழிநடத்தும் அணித் தலைவர் என்ற முறையில் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் வங்கதேச ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹசனும், தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சில் இலங்கை வீரர் லசித் மலிங்கா, நியூசிலாந்து வீரர் டிரன்ட் போல்ட், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டி20 அணி
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 போட்டிக்கான அணியில் இந்திய அணியில் இருந்து 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி20 அணிக்கு தோனி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சில் பும்ராவும், 3-வது வீரராக களமிறங்க விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டி20 அணியைப் பொறுத்தவரை மே.இ.தீவுகள் அணியின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது. அதிரடியான தொடக்கத்தை அளிக்கும் வகையில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், சுனில் நரேனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் உலக அளவில் கெயில் ரன் குவிப்பில் முதலிடத்தில் இருப்பதால், தொடக்க வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது வீராக களமிறங்கிய விராட் கோலியும், 4-வது இடத்தை நிரப்ப தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கேப்டனாகவும், 5-வது இடத்தில் களமிறங்கவும் நடுவரிசையை பலப்பபடுத்த தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தோனியின் விக்கெட் கீப்பிங், ஆல்ரவுண்டிங் பேட்டிங் போன்றவை நடுவரிசைக்குப் பெரும் பலம் சேர்க்கும்.
மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர்களும் அதிரடி வீரர்களுமான கெய்ரன் பொலார்ட், ஆன்ட்ரூ ரஸல், டிவைன் பிராவோ ஆகியோர் 6-வது மற்றும் 7-வது, 8-வது பேட்ஸ்மேன்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேகப்பந்துவீச்சில் இலங்கை வீரர் லசித் மலிங்காவும், ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து ரஷித் கான் சுழற்பந்துவீச்சுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த யார்கர் வீசும் பந்துவீச்சாளர்கள் என்ற அடிப்படையில் மலிங்காவும், பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT