Published : 25 Dec 2019 01:40 PM
Last Updated : 25 Dec 2019 01:40 PM
சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான விக்கெட் வீழ்த்திய இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டுத் தெரிவித்துள்ளார்
கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் குறித்த பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்டிருந்தது. அதில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திர அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். ஐசிசி வெளியிட்ட பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார், அதிலும் சுழற்பந்துவீச்சாளர் இவர் ஒருவர் மட்டுமே.
2-வது இடத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் 535 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 525 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்திலும் உள்ளனர். 4-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் டிம் சவுதி472 விக்கெட்டுகளையும், டிரன்ட் போலட் 458 விக்கெட்டுகளை வீழ்த்தி 5-வது இடத்திலும் உள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின் தன்னை மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வந்தார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அவரின் திறமை ஒளிர்ந்தது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50-வது விக்கெட், 100-வது விக்கெட், 150 விக்கெட், 200 வது விக்கெட், 250-வது விக்கெட், 300 விக்கெட் மற்றும் 350 விக்கெட்டுகளை மிக விரைவாக எட்டியுள்ளார்.
அஸ்வினின் சாதனையை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அவர் ட்விட்டில் பதிவிட்ட செய்தியில், " கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான சர்வதேச விக்கெட்டுகளை அஸ்வின் ரவிச்சந்திரன் வீழ்த்தியுள்ளார். என்ன அருமையான சாதனை, முயற்சி. நினைக்கவே பெருமையாக இருந்தாலும், சிலநேரங்களில் கவனிக்கப்படாமல் போகிறது" எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஐசிசி வெளியிட்ட இன்ஸ்ட்ராகிராம் பதிவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT