Published : 23 Dec 2019 06:45 PM
Last Updated : 23 Dec 2019 06:45 PM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் 2019-ம் ஆண்டின் முடிவில் இரு இந்திய வீரர்கள் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், துணை கேப்டன் ரோஹித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி 263 ரன்கள் குவித்தார். அதுமட்டுமல்லாமல் 22 ஆண்டுகளாக இலங்கை வீரர் ஜெயசூர்யா தக்கவைத்திருந்த ஓராண்டில் தொடக்க வீரர் ஒருவர் அதிக ரன்கள் சேர்த்த சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்தார்.
விராட் கோலி 2019-ம் ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்துத் தரப்புப் போட்டிகளிலும் சேர்த்து 2,455 ரன்கள் சேர்த்து தொடர்ந்து 4-வது முறையாக 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் காலண்டர் ஆண்டில் சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
இந்த இருவரும் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளனர். விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 834 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர்.
இதில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் மே.இ.தீவுகள் தொடரில் 185 ரன்கள் சேர்த்ததையடுத்து, தரவரிசையில் 17 இடங்கள் முன்னேறி 71-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் 104-வது இடத்தில் இருந்து 81-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்
மே.இ.தீவுகள் வீரரும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளார். இந்த தொடரில் 222 ரன்கள் குவித்ததையடுத்து, தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை அடைந்துள்ளார்.
அதேபோல ஷிம்ரன் ஹெட்மெயர் 6 இடங்கள் உயர்ந்து 19-வது இடத்துக்கும், நிகோலஸ் பூரன் 33-வது இடத்தில் இருந்து 30-வதுஇடத்துக்கும் உயர்ந்துள்ளனர். பந்துவீச்சாளர் காட்ரெல் 6 இடங்கள் உயர்ந்து 30-வது இடத்துக்கும், கீமோ பால் 104-வது இடத்துக்கும் ஏற்றம் கண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT