Published : 26 May 2014 03:16 PM
Last Updated : 26 May 2014 03:16 PM

தகுதி பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது- திராவிட்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சற்றும் எதிர்பாராத விதத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

அணியின் தோல்வியினால் சற்றே கோபமடைந்த திராவிட் தனது தொப்பியைக் கழற்றி தரையில் ஓங்கி அடித்தார். பிறகு உடனே தொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டார்.

தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் ராகுல் திராவிட் கூறுகையில் “பிளே ஆஃபிற்குத் தகுதி பெறாதது உண்மையில் பெரும் ஏமாற்றமளிக்கிறது”

"ஒரு நிலையில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதினோம். ஆனால் இன்னொரு பந்து வீச வேண்டியிருந்தது. அது பவுண்டரி ஆனது, இப்போது எங்கள் உணர்ச்சிகள் எப்படியிருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

அந்த ஒரு பந்திற்கு முன்னால் எங்கள் குழாமில் முழுதும் மகிழ்ச்சி, அவர்களிடம் உற்சாகம் குன்றிக்காணப்பட்டது. ஒரு பந்திற்கு பிறகு ஒட்டுமொத்த சூழ்நிலையும் தலைகீழ் ஆனது.

கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டங்களில் இந்த ஆட்டமும் ஒன்று. ஆனால் ஆட்ட முடிவின் எதிர்முனையில் நான் இருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்றார் திராவிட்.

மும்பை அணிக்கு ஒரு நேரத்தில் வெற்றிக்கு 31 பந்துகளில் 82 ரன்கள் தேவைப்பட்டது. நிச்சயம் இது கடினமான இலக்குதான், எடுப்பது மிகக் கடினம் என்றே எதிர்பார்க்கபப்பட்டது. இந்த நிலையிலிருந்து தோல்வி ஏற்பட்டது குறித்து திராவிட் கூறுகையில்,

31 பந்துகளில் 82 ரன்கள் தேவை என்ற நிலையில் ஓரிரண்டு சிக்கனமான ஓவர்களை வீசியிருந்தால் ஆட்டம் எங்கள் பக்கமே இருந்திருக்கும். ஓவருக்கு 7 அல்லது 8 ரன்களோ, ஏன் 10 ரன்களையே கூட கொடுத்திருந்தால் பிரச்சனையில்லை ஆனால் மும்பை பேட்ஸ்மென்கள் 15, 16 ரன்களை எடுத்தனர்.

ரோகித்தை அவுட் செய்தோம், பிறகு ராயுடு, ஆண்டர்சன் பேட் செய்தனர். அப்போது 12 முதல் 15 பந்துகளில் 50 ரன்களை விட்டுக் கொடுத்தோம். இந்த இடத்தில்தன் கோட்டைவிட்டோம்”

என்றார் திராவிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x