Published : 21 Dec 2019 03:18 PM
Last Updated : 21 Dec 2019 03:18 PM

வரிசையாக 10வது தொடர் வெற்றியை நோக்கி விராட் கோலி படை: 13 ஆண்டுகள் வேதனையை மாற்றுவாரா பொலார்ட்

கட்டாக்

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் எதிர்ப்பார்த்தது போலவே ஆளுக்கு ஒரு வெற்றி என்ற நிலையில் நாளை (22ம் தேதி, ஞாயிறு) கட்டாக் மைதனாத்தில் 3வதும், இறுதியுமான ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியிலும் வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றி தொடர்ச்சியாக 10வது இருதரப்பு ஒருநாள் தொடரை வென்று, இந்த ஆண்டை சிறப்புடன் முடிக்கும் முனைப்பில் இந்திய அணியும், எதிர்பார்த்த அளவுக்கு ‘அடிமை’யாக மோசமாக சரணடையாமல் அவ்வப்போது விராட் கோலி வயிற்றில் மோட்டார் ஓட்டும் ஆட்டத்தை மே.இ.தீவுகள் அணியும் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதனால் இந்தியாவை வீழ்த்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரை இந்தியாவுக்கு எதிராகக் கைப்பற்றும் வாய்ப்பையும் பொலார்ட் சுலபத்தில் கைவிடமாட்டார் என்று எதிர்பார்க்கலாம்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்ய நேரிட்டால், பிட்ச் அதிரடி மட்டைப் பிட்சாக இருந்தால் இந்திய அணியின் தொடக்க வீரர்களிடத்தில் வீரம் பிறக்கும், கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தால் டாப் 3 ஆட்டம் காணும் என்பதைப் பார்த்து வருகிறோம். கட்டாக் பிட்ச் கட்டாந்தரை பிட்ச் என்பது தெரிந்ததே.

முதல் போட்டியில் மே.இ.தீவுகளின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய அணியின் பந்து வீச்சு திணறியது, கோலியின் கேப்டன்சி, இந்திய பீல்டிங் பெரிய அளவுக்கு மோசமாக இருந்தது. ஆனால் விசாகப்பட்டிணத்தில் கட்டாந்தரை பிட்சில் ரோஹித், ராகுல் வெளுத்து வாங்கி விட்டனர், இரட்டைச் சத கூட்டணி அமைக்க ராகுல், ரோஹித் இருவரும் சதமெடுக்க ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த் சேர்ந்து 4 ஓவர்களில் 73 ரன்களை புரட்டி எடுக்க இந்திய அணி தனது 387/5 என்று தன் 9வது மிகப்பெரிய ஒருநாள் ஸ்கோரை எட்டியது. மே.இ.தீவுகளை மோசம் என்று கூறிவிட முடியாது, நிகோலஸ் பூரன், ஷேய் ஹோப் வெஸ்ட் இண்டீஸுக்கு ஹோப் அளித்தனர், ஆனால் முகமது ஷமியின் அபாரமான அந்த ஓவரில் பூரன் ஆட்டமிழக்க அதிரடி அனல் பொலார்ட் கோல்டன் டக் அடித்தார். இதனையடுத்து குல்தீப் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் நாளையை போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி ரன் எடுக்காததால் கட்டாக் நாளை அவருக்குக் கைகொடுக்கும் அப்படிக் கொடுத்தால் மே.இ.தீவுகளுக்குச் சிக்கல்தான்.

நாளைய போட்டியில் தீபக் சாஹர் இல்லை, அவருக்குப் பதிலாக நவ்தீப் சைனி வருகிறார், இவர் நல்ல வேகத்தில் வீசக்கூடியவர், ஆனால் அந்த வேகமே அவருக்கு எமனாக அமைந்தாலும் அமைய வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் மோசமான பீல்டிங்:

இந்திய அணி தொடர்ந்து மோசமாக பீல்ட் செய்து வருகிறது, விராட் கோலியே இப்படி பீல்ட் செய்தால் எந்த ஒரு இலக்கும் போதாது என்று விமர்சித்த நிலையில் பூரன் கொடுத்த கேட்சை சாஹர் விட்டார், ஷேய் ஹோப்புக்கு ஒரு கேட்ச் விடப்பட்டது.

எனவே நாளையும் விசாகப்பட்டிணம் போல் கட்டாந்தரை பிட்ச் என்பதால் அவர்களும் அடிப்பார்கள், அப்போது வாய்ப்புகள் வரும் கேட்சைப் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

விராட் கோலி நிச்சயம் நாளை தடம் பதிப்பார் என்று எதிர்பார்க்கும் அதே நேரத்தில் அன்றைய தினம் இரு கேப்டன்களுமே கோல்டன் டக் அடித்தனர், அதனால் பொலார்ட் நாளை நிச்சயம் அடித்து அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முனைப்புக் காட்டுவார். ஹெட்மையர் சென்னையில் தன் அதிகபட்ச ஸ்கோரான 139 ரன்களை எடுக்க டெல்லி கேப்பிடல்ஸ் இவரை ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுக்க ஏகப்பட்ட குஷியில் இருக்கிறார், இது இந்திய அணிக்கு நல்லதல்ல.

ஸ்டார் அந்தஸ்து, விளம்பரங்களையும், ரசிகர்களையும் ஈர்க்கும் தன்மை ஆகியவைதான் ஐபிஎல் ஏலத்தின் பிரதானம், ஆனால் இவை எதுவும் ஜேசன் ஹோல்டருக்கு இல்லை, ஆனால் மிக அருமையாக வீசுகிறார், இன்னமும் கூட ரோஹித் சர்மா, ராகுலுக்கு அவரைப் புதிய பந்தில் பேத்தாமல் ஆட முடியவில்லை, ஆனால் திறமையான பவுலரான இவர் ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த தொடரில் 2-3 என்று இந்திய அணி ‘உதை’ வாங்கியதால் இம்முறை விட்டு விட விராட் கோலி தயாராக இருக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு இருதரப்பு தொடர்களை சேர்ந்தார்போல் இந்திய அணி இழந்ததில்லை.

தோனி, யுவராஜ் விளாசல்

கடந்த முறை கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஆடிய போது 381 ரன்களை விளாசித்தள்ளியது. அடித்தது யார் யார் தெரியுமா? யுவராஜ் சிங் 127 பந்துகளில் 150 ரன்கள், 21 பவுண்டரி 3 சிக்ஸ், இன்னொருவர் ‘தல’ தோனி 122 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 134. ஆனால் இங்கிலாந்தும் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்தனர் மோர்கன் 81 பந்துகளில் 102 ரன்களை வெளுத்துக் கட்டினார். பும்ராவுக்கே சாத்துமுறை நடந்தது, 9 ஒவர் 81 ரன்கள் 2 விக்கெட் என்ரு 9ம் வாய்ப்பாடு படித்தார் இதே பிட்சில். அப்போது அஸ்வின் தான் 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜடேஜா டைட்டாக வீசி 45 ரன்களையே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்ற இங்கிலாந்து 366/8 என்பது வரை வந்து தோற்றனர்.

இதே போன்ற விறுவிறுப்பான போட்டியை நாளை எதிர்பார்க்கலாம். ஆட்டம் மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x