Last Updated : 21 Dec, 2019 02:54 PM

 

Published : 21 Dec 2019 02:54 PM
Last Updated : 21 Dec 2019 02:54 PM

இன்னும் ஒரு விக்கெட், 9 ரன்கள்தான்: புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் குல்தீப்; 22 ஆண்டு வரலாற்றை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?

குல்தீப் யாதவ், ரோஹித் சர்மா : கோப்புப்படம்

கட்டாக்,

ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் நாளை நடைபெற இருக்கும் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, சைனமேன் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் புதிய மைல்கல்லை எட்ட உள்ளனர்.

இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் 3-வது போட்டி நாளை கட்டாக் நகரில் நடக்கிறது.

விசாகப்பட்டிணத்தில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி குல்தீப் யாதவ் சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் மற்றொரு மைல்கல்லை எட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டியில் 54 ஆட்டங்களில் 99 விக்கெட்டுகள் எடுத்துள்ளார், 100 விக்கெட்டை எட்டுவதற்கு இன்னும் அவருக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவை. ஒருவேளை நாளை நடக்கும் போட்டியில் 100-வது விக்கெட்டை குல்தீப் வீழ்த்தினால் 100 விக்கெட் வீழ்த்திய 22-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது 55-வது ஆட்டத்தில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார். நாளை குல்தீப் ஒருவிக்கெட் வீழ்த்தினால் குல்தீப்பும், ஷமியுடன் சாதனையில் இணைவார். மேலும், வேகமாக 100-வது விக்கெட்டை வீழ்த்திய 8-வது இந்திய சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் குல்தீப் யாதவ் பெறுவார்.

தற்போது அனில் கும்ப்ளே மட்டுமே அதிகபட்சமாக 334 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளராக உள்ளார். 269 ஒருநாள் ஆட்டத்தில் 334 விக்கெட்டுகளை கும்ப்ளே வீழ்த்தியுள்ளார். அதைத் தொடர்ந்து ஜவஹல் ஸ்ரீநாத் 229 ஒருநாள் போட்டியில் 315 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வதுஇடத்திலும் உள்ளனர்.

அதேபோல தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். ரோஹித் சர்மா இன்னும் 9 ரன்களை நாளை நடைபெறும் போட்டியில் எடுத்தால், இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை முறியடிப்பார்.

ஜெயசூர்யா கடந்த 1997-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகள் முழுவதிலும் 2 ஆயிரத்து 387 ரன்கள் சேர்த்திருந்தார். தற்போது 2019ம் ஆண்டில் ரோஹித் சர்மா 2ஆயிரத்து 379 ரன்களுடன் உள்ளார். ஒரு ஆண்டில் அதிகமான ரன்கள் குவித்த வீரர் என்ற அடிப்படையில் ஜெயசூர்யாவை முந்துவதற்கு ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது குறிப்பிடத்தக்கது. நாளைய போட்டியில் ரோஹித் சர்மா 9 ரன்களை எட்டினால் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை முறியடித்த வீரர் எனும் பெருமைக்கு சொந்தக்காரராவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x