Published : 20 Dec 2019 05:11 PM
Last Updated : 20 Dec 2019 05:11 PM
தேசிய கிரிக்கெட் அகாடமியில்(என்சிஏ) உடல்தகுதித் தேர்வு செய்யாததால் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை என்சிஏ தலைவர் திராவிட் திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, இந்திய அணிக்குள் தேர்வாகும் ஒவ்வொரு வீரரும் என்சிஏவில் உடல்தகுதிசான்று பெற்றுத்தான் அணிக்குள் வர வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்துவிட்டார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டதையடுத்து ஓய்வில் இருந்தார். உடல்நலம் குணமடைந்தைத் தொடர்ந்து பும்ரா, தனது உடல்தகுதித் தேர்வு மற்றும் பயிற்சிக்குத் தனியார் மருத்துவர்களையும், பயிற்சியாளர்களையும் நியமித்தார்.
பிசிசிஐ விதிப்படி இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களின் உடல்தகுதித் தேர்வைப் பெங்களூரில் உள்ள திராவிட் தலைவராக இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று, உடல்தகுதித் தேர்வு பெற்றபின்தான் அணிக்குள் வர முடியும்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை பும்ராவுக்கு உடல்தகுதித் தேர்வு நடத்த என்சிஏ தலைவர் திராவிட்டும், உடல்தகுதித் தேர்வாளர் ஆஷிஸ் கவுசி்க் ஆகியோர் வந்தனர். ஆனால், , என்சிஏவில் சேர்ந்து பயிற்சி பெறவும், உடற்தகுதித் தேர்வு பெறவும் பும்ரா ஆர்வமில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், என்சிஏ அமைப்பில் பயிற்சி பெற ஆர்வமில்லாமல் விசாகப்பட்டிணத்தில் இந்திய அணியோடு பயிற்சியில் பும்ரா ஈடுபட்டுள்ளார்.
பும்ராவின் இந்த செயல்பாடுகளினால் ஆத்திரமடைந்த ராகுல் திராவிட், உடல் தகுதித்தேர்வு நடத்த முடியாது என்று கூறி பும்ராவை திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு எட்டியுள்ளது. இதுகுறித்து கொல்கத்தாவில் சவுரவ் கங்குலியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், " எனக்கு பும்ரா, திராவிட் விவகாரம் குறித்துத் தெரியாது. ஆனால் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் என்சிஏவில் பயிற்சி பெற்று, உடல்தகுதித் தேர்வை நிரூபித்து அதன்பின்தான் இந்திய அணிக்குள் வர வேண்டும். அதுதான் வழிமுறை.
ஆண்டு முழுக்க வெளிநாடுகளில் இந்திய வீரர்கள் விளையாட உள்ளார்கள். பும்ரா கேட்டிருந்தால் என்சிஏ உடல்தகுதி நிபுணர்களை அனுப்பி இருப்போம்.என்சிஏ அமைப்பின் கீழ் பும்ரா பயிற்சி எடுத்திருக்கலாம். என்சிஏ அமைப்பில் சிறந்த பயிற்சியாளர்களும், உடல்தகுதி நிபுணர்களும் இருக்கிறார்கள்.
திராவிட் மீது எனக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது, மிகச்சிறந்த வீரர், அவரின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருக்கும். திராவிட் தலைமையில் என்சிஏ சிறப்பாக உருவாகும்" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT