Published : 19 Dec 2019 09:29 PM
Last Updated : 19 Dec 2019 09:29 PM
கொல்கத்தாவில் நடந்துவரும் 2020 சீசன் ஐபில் போட்டிக்கான ஏலத்தில் 48 வயதான வீரரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்படாத ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்க் ஸ்டோனிஸை டெல்லி அணி வாங்கியது.
மும்பையைச் சேர்ந்த 48 வயதான வீரர் பிரவிண் தாம்பே. உள்நாட்டுப் போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடி வந்த பிரவிண் தாம்பே ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (2017), குஜராத் லயன்ஸ் (2016) ஆகிய அணிகள் எடுத்துள்ளன.
2014-ம் ஆண்டில் ராஜஸ்தான் அணியில் லெக் ஸ்பின்னரான பிரவிண் தாம்பே இருந்தபோது கொல்கத்தா அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அப்போதே அவருக்கு 42 வயதுக்குக் குறைவில்லாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பிரவிண் தாம்பேவை ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் அதிக வயதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் பிரவிண் தாம்பே என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் தன்னைத் தேர்வு செய்யப்பட்டது குறித்து பிரவிண் தாம்பே கூறுகையில், "நான் ஏலத்தில் எடுக்கப்படுவேன் என்று நினைக்கவே இல்லை. நீங்கள் நினைவுபடுத்தாவிட்டால் எனக்குத் தெரிந்திருக்காது. ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு வீரரும் ஏலம் எடுக்கப்படுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தற்போது 20 வயதாகியதுபோல் உணர்கிறேன்" எனத் தெரிவித்தார். பிரவிண் தாம்பேவுக்கு தற்போது 18வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்க் ஸ்டோனிஸை முதல் சுற்று ஏலத்தில் யாரும் விலைக்கு வாங்கவில்லை. இதனால், இந்த முறை ஏலத்தில் வாங்கப்படமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2-வது சுற்றில் மீண்டும் ஸ்டோனிஸ் பெயர் வாசிக்கப்பட்டபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இதில் இறுதியாக ஸ்டோனிஸை ரூ.4.80 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலமாக இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மாவை ரூ.50 லட்சத்துக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது.
முதல் சுற்றில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் விலை போகவில்லை. ஆனால், 2-வது சுற்றில் டேல் ஸ்டெயின் பெயர் வாசிக்கப்பட்டபோது, ரூ.2 கோடிக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது. கடந்த ஆண்டும் ஆர்சிபி அணியில் ஸ்டெயின் இருந்தபோதிலும் காயம் காரணமாக ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT