Published : 19 Dec 2019 04:21 PM
Last Updated : 19 Dec 2019 04:21 PM
2020 சீசன் ஐபில் போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியாலும், உத்தப்பா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியாலும் விலைக்கு வாங்கப்பட்டனர்.
ஐபிஎல் தொடங்கியதில் இருந்து கடந்த 12 சீசன்களாக கர்நாடக வீரர் ராபின் உத்தப்பா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வந்தார். சிறந்த மேட்ச் வின்னராக உத்தப்பா இருந்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு சீசனில் அதிபட்சமாக 405 ரன்களும், 2014-ம் ஆண்டு சீசனில் 660 ரன்களும் சேர்த்தார். கடந்த சீசனில் 212 ரன்கள் சேர்த்திருந்த உத்தப்பாவை கொல்கத்தா அணி விடுவித்தது.
உத்தப்பாவுக்கு அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டது. உத்தப்பா விலைக்கு வந்ததும், அவரை பெங்களூரு அணி அடிப்படை விலைக்கு கேட்டது. ஆனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் போட்டியிட்டு ரூ.2.60 கோடிக்கு கேட்டது. ஆனால், இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.3 கோடிக்கு உத்தப்பாவை விலைக்கு வாங்கியது. ஏற்கெனவே ஜோஸ் பட்லர் ஒரு விக்கெட் கீப்பர் இருக்கும் நிலையில், கூடுதலாக உத்தப்பாவை விலைக்கு வாங்கியுள்ளது.
இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேஸன் ராய் கடந்த இரு ஐபிஎல் சீசன்களாகவே விளையாடி வருகிறார். இவரின் அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டது. அவரை மீண்டும் டெல்லி அணி ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ஆரோன் பிஞ்சை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி இருந்தது. பிஞ்சுக்கு அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆரோன் பிஞ்ச் ஏலத்துக்கு வந்ததும் பெங்களூரு அணி விலைக்குக் கேட்டது. ஆனால், கொல்கத்தா அணியும் கடுமையாகப் போட்டியிட்டு ரூ.1.80 கோடிக்கு விலை வைத்தது. ஆனால், பெங்களூரு அணி ரூ.2.80 கோடிக்கு ஆரோன் பிஞ்சுக்கு விலை வைத்தது. கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் கடுமையாகப் போட்டியிட்டன. இறுதியாக ரூ.4.4 கோடிக்கு ஆரோன் பிஞ்சை பெங்களூரு அணி விலைக்கு வாங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT