Published : 19 Dec 2019 01:02 PM
Last Updated : 19 Dec 2019 01:02 PM
கொல்கத்தாவில் இன்று நடக்கும் 2020-ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஏலத்தில் மொத்தம் 73 இடங்களுக்கு 332 வீரர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர்.
2020-ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. வழக்கமாக பெங்களூருவில் நடக்கும் ஏலம், முதல் முறையாக கொல்கத்தாவில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ.14.60 கோடி)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தற்போது ரூ.14.60 கோடி கையிருப்பு இருக்கிறது. இந்த அணி மொத்தம் 3 உள்நாட்டு வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 5 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.
தோனியைத் தலைமையாகக் கொண்டிருப்பதே இந்த அணிக்கு மிகப்பெரிய பலம்தான். அனுபவம் வாய்ந்த, மூத்த வீரர்கள் இந்த அணியில் அதிகமாக இருக்கிறார்கள். இருப்பினும் சிஎஸ்கே அணிக்குதான் ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. பந்துவீச்சில் அடிக்கடி பல வீரர்களுக்குக் காயம் ஏற்படுவதால், இந்த முறை பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து எடுக்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் (ரூ.13.05 கோடி)
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியின் கைவசம் தற்போது ரூ.13.05 கோடி இருப்பு இருக்கிறது. 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 5 வீரர்களைத் தேர்வு செய்யக் காத்திருக்கிறது. வேகப்பந்துவீச்சில் மலிங்கா, பும்ராவை அதிகம் இந்த அணி நம்பி இருக்கிறது. ஆனால், இருவரும் காயத்தால் அடிக்கடி அவதிப்படுவதால், இளம் வீரர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கும் வகையில் தேர்வு இருக்கும்.
டெல்லி கேபிடல்ஸ் (ரூ.27.85 கோடி)
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் ரூ.27.85 கோடி பணம் இருப்பு இருக்கிறது. மொத்தம் 11 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதில் 6 வெளிநாட்டு வீரர்களும், 5 உள்நாட்டு வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஏற்கெனவே அஜிங்கயே ரஹானே, அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளது மிகப்பெரிய பலமாகும். வெளிநாட்டு வீரர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் எடுத்து எடுக்கும் எனத் தெரிகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ.35.65 கோடி)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தற்போது அதிகபட்சமாக ரூ.35.65 கோடி பணம் கையிருப்பு உள்ளது. 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளது. முக்கிய வீரர்களான ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், பியூஷ் சாவ்லா ஆகியோரைக் கழற்றிவிட்டுள்ள கொல்கத்தா அணிய புதிய வீரர்களைத் தேர்வு செய்யும் ஆர்வத்துடன் இருக்கிறது. இளம் வீரர்களும், புதிய வீரர்களும் அணிக்குள் திரும்பும்போது உத்வேகமாக விளையாடுவார்கள் என்று எண்ணுகிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ரூ.42.70கோடி)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தற்போது ரூ.42.70 கோடி கையிருப்பு இருக்கிறது. 5 உள்நாட்டு வீரர்கள் உள்பட 9 வீரர்களை ஏலம் எடுக்க இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ.27.90 கோடி)
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் ரூ.27.90 கோடி கையிருப்பு இருக்கிறது. 6 உள்நாட்டு வீரர்கள் உள்பட 12 வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ.28.90 கோடி)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தற்போது ரூ.28.90 கோடி கையிருப்பு இருக்கிறது. 7 உள்நாட்டு வீரர்கள் 4 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 11 வீரர்களைத் தேர்வு செய்ய இருக்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(ரூ.17 கோடி)
டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரூ.17 கோடி கையிருப்பு இருக்கிறது. 5 உள்நாட்டு வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் என 7 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT