Published : 18 Dec 2019 09:30 AM
Last Updated : 18 Dec 2019 09:30 AM
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள்மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா வென்றது. இதையடுத்து ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியது.
சென்னையில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த அணிதொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளிடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றால் அந்த அணி தொடரைக் கைப்பற்றிவிடும். எனவே தொடரை சமன்செய்வதற்கு இந்திய அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி 287 ரன்கள் குவித்தபோதும், மேற்கிந்தியத் தீவுகள் அணி அதை எளிதில் சேசிங் செய்து வெற்றி கண்டது. எனவே இந்த ஆட்டத்தில் இந்திய அணி கூடுதல் ரன்களைக் குவிக்க முற்படும்.
முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாகவிளையாடவில்லை. ரிஷப் பந்த்,ஸ்ரேயஸ் ஐயரின் அரை சதங்களால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டியது. ஆனால் பந்துவீச்சு எடுபடாததால் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி கண்டது.
எனவே 2-வது ஆட்டத்தில் ராகுல், கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ரன் குவிக்க முற்படுவர்.
அதேபோல் பவுலிங்கில் தீபக்சாஹர், மொகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷிவம் துபே ஆகியோர் சிறப்பாக பரிமளிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி எளிதாகும்.
ஆனால் சென்னை போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எடுபடவில்லை. அவர்கள் ரன்களை வாரி வழங்கியதோடு, விக்கெட்களையும் வீழ்த்தவில்லை.
அதே நேரத்தில் முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்குகிறது. அந்த அணிவீரர் ஷாய் ஹோப், சிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் முதல் போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்தனர். அவர்களின் பேட்டிங் 2-வது போட்டியிலும் சிறப்பாக வெளிப்படக்கூடும்.
அதேபோல் பவுலிங்கில்அல்சாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் எதிரணியை அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்களாக உருவெடுத்துள்ளனர். மேலும்கீமோ பால், ஹோல்டர், பொல்லார்ட் ஆகியோரும் பந்துவீச்சில் உறுதுணையாக இருக்கின்றனர்.
அணிகள் விவரம்:
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா,ஷிவம் துபே, மொகமது ஷமி, தீபக்சாஹர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர், மணீஷ் பாண்டே.
மேற்கிந்தியத் தீவுகள்: கரன் பொல்லார்ட் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், ஷாய் ஹோப், காரி பியரி, ராஸ்டன் சேஸ், அல்சாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல், பிரன்டன் கிங், நிக்கோலஸ் பூரன், சிம்ரன் ஹெட்மயர், எவின் லீவிஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.
நேரம்: பிற்பகல் 1.30
இடம்: விசாகப்பட்டினம்
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT