Published : 15 Dec 2019 07:03 PM
Last Updated : 15 Dec 2019 07:03 PM
ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் மீட்டெடுப்பு அரைசதத்தால் சென்னையில் நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது ரிஷப் பந்த் 71 ரன்கள், ஸ்ரேயாஸ் அய்யர் 70ரன்கள் சேர்த்து அணியை மீ்ட்டெடுத்தனர். சென்னை சேப்பாக்கத்தில் ரிஷப்பந்த் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் கூட்டணி அமைத்து 114 ரன்கள் சேர்த்து கவுரவமான ஸ்கோரை அணி எட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.
சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவான ஆடுகளம் என்பது ஐபிஎல் போட்டியில் இருந்து நிரூபணம்ஆகி வருகிறது. இந்த மந்தமான ஆடுகளத்தில் இந்திய அணி சேர்த்த 288 ரன்கள் நிச்சயம் மே.இ.தீவுகள் அணிக்கு கடும் சவாலாகவே இருக்கும்.
ரிஷப்பந்த் அணிக்குத் தேவையா, அவர் வேஸ்ட் லக்கேஜ் என்று பல்வேறு விமர்சனங்களும், தோனியின் ஆளுமைக்கு ஈடாக அவரை வைத்து பேசி அவர் மீது அழுத்தத்தையும் கொடுத்தார்கள்.
இதனால் கடந்த சில போட்டிகளாக தனது இயல்பான ஃபார்மை இழந்து தவித்த ரிஷப் பந்த் இந்த போட்டியில் தனக்கே உரிய ஸ்டைலில் விளையாடி தன்னை நிரூபித்துள்ளார்.
ஸ்ரேயாஸ் அய்யர் தன்னை இத்தனை ஆண்டுகாலம் பயன்படுத்தாமல் ஏன் இருந்தீர்கள் என்று ஒவ்வொரு போட்டியிலும் தனது இருப்பை அணி நிர்வாகத்துக்கு அழுத்தமாக தனது பேட்டிங்கால் பதிவு செய்து வருகிறார். இனிவரும் ஒருநாள் போட்டிகளில் 4-வது வரிசைக்கு யாரை களமிறக்குவது என்ற குழப்பம் இல்லாமல் ஸ்ரேயாஸ் அய்யருக்கான இடம் உறுதியாகும்.
இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது கேதார் ஜாதவ். உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தபின் அணியில் இருந்து காணாமல் போன கேதார் ஜாதவ் இந்த போட்டிக்கு திரும்பியுள்ளது ஏன் எனத் தெரியவில்லை.
இதற்கு முன் நடந்த பல்வேறு உள்ளூர் போட்டிகளில் ஜாதவ் விளையாடினாரா என்பதற்கு எந்தவிதமான அடையாளங்களும் இல்லை. மணிஷ் பாண்டே, மயங்க் அகர்வால் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
ஆனால், கேதார் ஜாதவுக்கு மட்டும் உடனடியாக விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு வழங்கப்படுவது எந்த அழுத்தத்தின் அடிப்படையில் எனத் தெரியவில்லை.
அப்படியென்றால், உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஃபார்மில் இருக்கும் மணிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், சாம்ஸன் ஆகியோரின் திறமைக்கு என்னதான் மதிப்பு என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை குறிப்பிட்ட ஐபிஎல் அணியைச் சேர்ந்தவர்கள், சென்னையில் விளையாடும் போட்டி என்பதால் ஜாதவ் எடுக்கப்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.
டி20 போட்டியில் அறிமுக வீரராக 3-வது இடத்தில் இறக்கிவிடப்பட்ட ஷிவம் துபே அரைசதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். அதேபோன்று இந்த முறை துபேயே ரிஷப் பந்த்துக்குஅடுத்து களமிறக்கி இருக்கலாம். அல்லது 4-வது இடத்திலேயே களமிறங்கி இருக்கலாம். ஆனால், அறிமுக வீரரைக் கடைசி நேரத்தில் அழுத்தம் தரும் ஓவர்களில் இறக்கிவிட்டு அவர் விரைவாக ஆட்டமிழந்தது நம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் இருக்காதா?
மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொறுத்தவரைக்கும் டி20 போட்டிகளில் செய்த பலதவறுகளைத் திருத்திக்கொண்டார்கள். சிறப்பாகப் பீல்டிங் செய்தார்கள், தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசி, பின்னர் கோட்டைவிட்டார்கள். குறிப்பாக அல்சாரி ஜோஸப், காட்ரெல் சிறப்பாகப் பந்துவீசினர்.
டாஸ்வென்ற மே.இ.தீவுகள் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.. இந்திய அணியைப் பொறுத்தவரைக்கும் ராகுல், ரோஹித் நல்லத் தொடக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்போடு சென்னை ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால், மந்தமான ஆடுகளத்தில் பந்துகள் மெதுவாக வந்ததால் பேட்ஸ்மேன்கள் கணித்து ஆடுவதில் சிரமம் இருந்தது.
இதனால், காடரெல் வீசிய 7-வது ஓவரில் ராகுல் 6 ரன்னில் ஹெட்மெயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கோலி ஒரு பவுண்டரி அடித்த நிலையில், காட்ரெல் பந்துவீச்சில் இன்சைடு எட்ஜ் எடுத்து போல்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. காட்ரெல் தனக்கே உரிய சல்யூட் அடித்து ராகுலையும், கோலியையும் அனுப்பினார்.
அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். பலபந்துகள் ரோஹித் சர்மா அடிக்க முயன்றும் அவருக்குத் ஏற்றவாறு அமையவில்லை.
ஜோஸப் வீசிய 19-வது ஓவரில் மிட்விக்கெட்டில் பொலார்டிடம் கேட்ச் கொடுத்து 36 ரன்னில் ரோஹித் சர்மா வெளியேறினார். 80 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
4-வது விக்கெட்டுக்கு வந்த ரிஷப் வந்த், ஸ்ரேயாஸ் அய்யருடன் இணைந்தார். வழக்கமாக ரிஷப்பந்த் சில ஓவர்களிலேயே ஆட்டமிழந்துவிடுவார் என்பாதல், அந்த எண்ணத்துடனே அவர்மீதான கண்ணோட்டம் இருந்தது. ஆனால், நிதானமாகவே ரிஷப் பந்த் விளையாடத் தொடங்கினார்.
மோசமான பந்துகளை மட்டுமே தேர்வு செய்து இருவரும் பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினர். 25 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. 31 ஓவர்களில் 150 ரன்களை இந்தியஅணி தொட்டது. அவ்வப்போது பவுண்டரிகளையும், சிக்ஸரையும் அடித்து ரசிகர்களை இருவரும் உற்சாகப் படுத்தினர்.
இதற்கிடையே ஆடுகளத்துக்குள் ஒரு நாய் புகுந்து ரசிகர்களையும், வீரர்களையும் குஷியாக்கியது.
ஸ்ரேயாஸ் அய்யர் 70 பந்துகளில் அரைசதத்தையும், ரிஷப் பந்த் 49 பந்துகளில் அரைசதத்தையும் எட்டினர். இருவரின் கூட்டணியைப் பிரிக்க பொலார்ட் பலபந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை.
ஜோஸப் வீசிய 37-வது ஓவரில் மிட்விக்கெட்டில் பொலார்டிடம் கேட்ச்கொடுத்து ஸ்ரேயாஸ்அய்யர் 70 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரி அடங்கும். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்த சிறிதுநேரத்தில் பொலார்ட் பந்துவீச்சில் ரிஷப்பந்த் 71 ரன்கள் சேர்த்து ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
6-வது விக்கெட்டுக்கு கேதார் ஜாதவ், ஜடேஜாகூட்டணி ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர். ஜாதவ் 40 ரன்ககளில் பால் பந்துவச்சில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 21 ரன்னில் ராஸ்டன்சேஸ் மூலம் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அறிமுகப் போட்டியில் களமிறங்கிய ஷிவம் துபே 9 ரன்னில் பால் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசி 3 விக்கெட்டுகளை 13 ரன்களுக்கு இழந்தது இந்திய அணி. சாஹர் 6 ரன்னிலும், ஷமி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது. மே.இ.தீவுகள் தரப்பில் காட்ரெல், ஜோஸப், பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT