Last Updated : 15 Dec, 2019 03:50 PM

 

Published : 15 Dec 2019 03:50 PM
Last Updated : 15 Dec 2019 03:50 PM

கண்டதையும் பேசுகிறார்கள்;காயம்பட்ட எருமைகள் நாங்கள்: இங்கிலாந்துக்கு தெ. ஆப்பிரிக்க பயிற்சியாளர் பவுச்சர் எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்க அணியின் புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர்

ஜோகன்ஸ்பர்க்

இங்கிலாந்து அணியினர் கண்டதையும் பேசுகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம், நாங்கள் காயம்பட்ட ஆப்பிரிக்க எருமைகள், கவனமாக இருங்கள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

தென் ஆப்பிரிக்காவுக்குக இம்மாத இறுதியில் இங்கிலாந்து அணி பயணம் மேற்கொள்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது இங்கிலாந்து அணி. வரும் 26-ம் தேதி பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்க அணியும் மோதுகின்றன.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரைக் கடந்த சில மாதங்களாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. உள்நாட்டில் அனுபவம் இல்லாத இலங்கை அணி வீரர்களிடம் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்தியாவுக்குப் பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் தொடரை இழந்தது

தென் ஆப்பிரிக்க அணிக்குப் புத்துயிர் கொடுக்க 3 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்குழு இயக்குநராக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், பயிற்சியாளராக முன்னாள் விக்கெட்கீப்பர் மார்க் பவுச்சர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பிரி்ன்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மார்க் பவுச்சர் 147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவமும், ஒட்டுமொத்தமாக 999 பேரை ஆட்டமிழக்கச் செய்த அனுபவமும் உடையவர்.

இங்கிலாந்து அணி பயணம் குறித்து தென் ஆப்பிரிக்கப் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஜோகனஸ்பர்க் நகரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்க அணி கடினமான காலங்களைச் சந்தித்தபோதெல்லாம் நான் தலையிட்டு இருக்கிறேன். குறிப்பாக ஹன்சே குரோனியே காலக் கட்டம் மிகவும் கடினமான நேரம் அது. 2000ம் ஆண்டில் நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம். அந்த நேரத்தில் எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததால் சிறப்பாகச் செயல்பட்டோம் திருப்புமுனையை ஏற்படுத்தினோம்

விளையாட்டு என்பது வியப்புக்குரிய விஷயம், 2 நாட்களில் எதையும் மாற்றிவிடலாம் என்றாலும் கூட, அதற்குக் கடினமான பயிற்சிகளைச் செய்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டிருக்கிறேன்.

இங்கிலாந்து வீரர்கள் எங்களைப் பற்றி ஊடகங்களில் ஏதேதோ பேசுகிறார்கள். ஒருவிஷயம் மட்டும் அவர்களுக்குச் சொல்கிறேன், நாங்கள் அடிபட்ட ஆப்பிரிக்க எருமைகள் எச்சரிக்கையாக இருங்கள்.

எங்களுடைய நம்பிக்கை சற்று குறைந்திருந்தாலும் கிரிக்கெட் குறித்த அனுபவ அறிவு அதிகமாக இருக்கிறது, அதைப் பயன்படுத்துவோம்.

சரியான திசையில் செல்வதற்கு அதிகமான அளவில் தகவல் கிடைப்பது அவசியம், வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

ஏராளமான திறமையான வீரர்களை எங்கள் நாடு பெற்றுள்ளது, அவர்களைச் சிறிதளவு பட்டைத் தீட்ட வேண்டும், அதன்பின் வாய்ப்புகளைக் கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்கள்.

இவ்வாறு பவுச்சர் தெரிவித்தார்

குறிப்பு: காயம்பட்ட ஆப்பிரிக்க எருமைகள்
(ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒருவகை எருமைகள், வேட்டையாடுபவர்களை வேட்டையாடும் தன்மை படைத்தவை. அதிலும் காயம் ஏற்பட்டபின் அதன் வீரியம், ஆக்ரோஷம், ஆவேசம், எதிரிகளை தாக்கும் விதம் உக்கிரமாக இருக்கும் என்பதால், காயமடைந்த எருமைகளை வேட்டையாட வேட்டைக்காரர்களே தயங்குவார்கள். அதைத்தான் பவுச்சர் குறிப்பிட்டுள்ளார்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x