Published : 15 Dec 2019 02:14 PM
Last Updated : 15 Dec 2019 02:14 PM
தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து ஓய்வு பெற்ற டி வில்லியர்ஸிடம் பேசி மீண்டும் அணிக்குள் கொண்டுவர முயற்சி எடுப்பேன் என்று புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர் உறுதியளித்துள்ளார்.
தென் ஆப்பிரி்க்க அணியின் முன்னாள் கேப்டனான ஏபி டிவில்லியர்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். டிவில்லியர்ஸ் போன்ற வலிமையான பேட்ஸ்மேன்கள் இல்லாததன் விளைவைக் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சந்தித்தது.
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் சந்திக்காத தோல்வியை தென் ஆப்பிரிக்க அணி சந்தித்து லீக் சுற்றோடு வெளியேறியது. இதையடுத்து வலிமையான தென் ஆப்பிரிக்க அணியாக மீண்டும் கட்டமைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் முதல் படியாகத் தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் கேப்டன் ஸ்மித்தையும், பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரையும் தென் ஆப்பிரிக்க வாரியம் நியமித்தது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்று தற்போதும் பல்வேறு நாடுகளின் லீக் ஆட்டங்களில் விளையாடிவரும் வீரர்களை மீண்டும் அணிக்குள் சேர்க்கும் திட்டம் குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர், கிரிக்இன்போ தளத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குச் செல்லும் போது எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரைச் சமீபத்தில் ஓய்வு பெற்றுச் சென்று மற்ற நாடுகளின் டி20 லீக் போட்டிகளில் விளையாடிவரும் வீரர்களை மீண்டும் அணிக்குள் அழைக்கும் முடிவில் இருக்கிறேன்.
குறிப்பாக ஏ.பி.டிவில்லியர்ஸ் அணிக்குள் மீண்டும் அழைப்பது குறித்து ஏன் அவரிடம் பேச்சு நடத்தக்கூடாது. நான் அவரிடம் பேசுவேன். இந்த பணி எனக்கு எளிதாகக் கிடைக்கவில்லை.
அணியைத் தரம் உயர்த்தும் வகையில் அனைத்து வீரர்களிடமும் பேசுவேன்.
உலகக் கோப்பைப் போட்டியில் சிறந்த வீரர்களுடன் நீங்கள் விளையாட விரும்பினால், இரு விஷயங்களை நாங்கள் தீர்க்க வேண்டியது அவசியம். முதலில் ஊடகங்கள், அடுத்தாக சக அணி வீரர்களிடம் பேசித் தீர்க்க வேண்டும். நான் செய்வது தென் ஆப்பிரிக்க அணிக்கு உகந்ததாக இருந்தால் ஏன் செய்யக்கூடாது.
பயிற்சியாளர் என்ற பொறுப்பு, பார்வையில், அணியில் வீரர்களின் பலத்தை அதிகரிக்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன்.
இவ்வாறு பவுச்சர் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT