Published : 14 Dec 2019 02:00 PM
Last Updated : 14 Dec 2019 02:00 PM
விளையாடும் திட்டம் தெளிவாக இருந்தால், டெஸ்ட் போட்டி மட்டுமல்லாது ஒருநாள் மற்றும் டி20 போட்டி என எதில் வேண்டுமானாலும் எளிதாக மாறிக்கொள்ளலாம் என்று இந்திய அணி வீரர் மயங்க் அகர்வால் தெரிவித்தார்
இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த ஷிகர் தவணுக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும், முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாகப் பேட் செய்தும் அருமையான பேட்டிங் ஃபார்மில் உள்ளார். டெஸ்ட் போட்டிக்கு மட்டும் அதிகமாக தேர்வு செய்யப்பட்டுவரும் மயங்க் அகர்வால் ஒருநாள் போட்டிகளில் ஜொலிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து மயங்க் அகர்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மயங்க் அகர்வால் சென்னையில் அளித்த பேட்டியில் கூறுகையில், " நான் அடித்து ஆக்ரோஷமாக விளையாடுவதைத்தான் விரும்புகிறேன். கிரிக்கெட் வீரராக இதுதான் எனக்குச் சிறந்தது. நான் கிரிக்கெட் விளையாடாமல் இருப்பதைக் காட்டிலும் இப்படி விளையாடுவதுதான் சிறந்தது. என்னுடைய மனநிலையில் நாம் எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டமிடல் மிகவும் அவசியம். அவ்வாறு திட்டமிடல் சிறப்பாக இருந்தால், எந்த போட்டிக்கும் நாம் எளிதாக மாறிக் கொள்ளலாம்.
அது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி அல்லது ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி எளிதாக மாறிவிடலாம். அதற்கு நாம் விளையாடும் திட்டம் மிகவும் அவசியம்
நான் இந்தியாவில் நடக்கும் போட்டி மட்டுமல்லாது, உலகில் எங்குப் போட்டி நடந்தாலும் நாம் அணிக்கு எவ்வாறு சொத்தாக இருப்போம் , அணிக்கு எந்த அளவுக்குப் பங்களிப்பு செய்வோம் என்பதைத்தான் சிந்திப்பேன். நான் ஒருவேளை பேட்டிங்கில் சிறப்பாக ரன் அடிக்க முடியாவிட்டாலும் கூட பீல்டிங்கில் அணிக்கு எவ்வாறு பங்களிப்பு செய்யலாம் என்று யோசித்துச் செயல்படுவேன்.
ஒவ்வொரு போட்டித்தொடரிலும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறவே நான் விரும்புகிறேன். இந்த மனநிலையில் நான் களமிறங்கும்போது, என் மனநிலை சிறப்பாக இருக்கும். இதுபோல் களமிறங்கினால், 100 சதவீதம் முடிவு கிடைக்கும் என்று சொல்லாவிட்டாலும், நாம் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு கிடைக்கும் " எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT