Published : 12 Dec 2019 05:20 PM
Last Updated : 12 Dec 2019 05:20 PM
ஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டி போன்றே, ஸ்பெயினில் மிகவும் பிரபலமானது ஸ்பானிஷ் லீக். இதில் நடக்கும் லா லிகா கால்பந்து லீக் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்பந்துப் போட்டிகளுக்கு அந்த விளையாட்டோடு தொடர்பில்லாத மற்றொரு விளையாட்டு வீரர் தூதராக நியமிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். ஸ்பானிஷ் லீக்கில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ரியல் மாட்ரிட் அணியின் தீவிர ரசிகர் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து லா லிகா கால்பந்து லீக்கில் உள்ள அணிகளாக பார்சிலோனா, ரியல் மார்ட்ரிட் கிளப் அணிகள் இந்தியாவில் கால்பந்து விளையாட்டைப் பரப்ப பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. லா லிகா கால்பந்து லீக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் அலுவலகத்தைத் திறந்து மக்களிடம் கால்பந்து விளையாட்டைப் பரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ரோஹித் சர்மாவைத் தூதராக நியமித்து கால்பந்து விளையாட்டைப் பரப்பத் திட்டமிட்டுள்ளது.
லா லிகா கால்பந்து லீக்கின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், "இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கு உலகளாவிய வளர்ச்சி இருக்கிறது, மக்களிடம் வரவேற்பும் இருக்கிறது. இதைத் தூங்கிக்கொண்டிருக்கும் அசுரன் என்று கருதத் தேவையில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கான வளர்ச்சி அதிகரித்து வருகிறது. கால்பந்து விளையாட்டின் மோகமும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
லா லிகா கால்பந்து போட்டியின் இந்தியத் தூதராக நான் நியமிக்கப்பட்டது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஸ்பெயின் நாட்டுக் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்களைப் பார்ப்பதும் எனக்கு ஊக்கமாக அமையும். இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்களை லா லிகாவின் தூதராகச் சென்று சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT