Published : 11 Dec 2019 11:18 AM
Last Updated : 11 Dec 2019 11:18 AM
இந்தியா, மேற்கிந்தியத் தீவு அணி கள் மோதும் 3-வது டி20 கிரிக் கெட் ஆட்டம் மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட் டத்தை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் ஆட்டத்தில் பெரும் பரபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவு கள் அணி வெற்றி கண்டது. இதனால் தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடை பெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரைக் கைப்பற்றும் என்பதால் போட்டி யைக் கைப்பற்றுவதில் இரு அணிகளும் போராடும் என்பதில் சந்தேகமில்லை.
முதல் 2 ஆட்டங்களிலும் எதிர் பார்த்த அளவுக்கு சிறப்பாக விளை யாடாத ஹிட்மேன் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் தனது திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க் கலாம். கே.எல்.ராகுல், கேப்டன் விராட் கோலி, ஷிவம் துபே, ஸ்ரே யஸ் ஐயர் ஆகியோரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும். பவுலிங்கில் புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், யுவேந்திர சாஹல், ஷமி கூட்டணியும் கைகொடுக்கவேண்டும்.
2-வது ஆட்டத்தில் மோசமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தருக் குப் பதிலாக இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் லென்டில் சிம்மன்ஸ் கொடுத்த கேட்சை தவறவிட்ட சுந்தர், விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். பீல்டிங்கில் கோட்டை விட்டதால்தான் 2-வது ஆட்டத்தில் தோல்வி கண்டோம் என்று கேப்டன் கோலியும் தெரிவித்துள்ளார்.
இதேபோல ரிஷப் பந்த்தும் சிறப்பாக ஆடவேண்டிய கட்டாயத் தில் உள்ளார். எனவே இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிக முக்கிய மானதாக உள்ளது.
அதே நேரத்தில், 2-வது ஆட்டத் தில் வெற்றி கண்ட உற்சாகத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி களம் காண்கிறது. அந்த அணியின் எவின் லீவிஸ், லென்டில் சிம் மன்ஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் வலுவான வீரர்களாக உள்ளனர்.
இதுதவிர பிரன்டன் கிங், ஜேசன் ஹோல்டர், கேப்டன் பொலார்டு ஆகியோர் பின்வரிசையில் பலம் சேர்க்கின்றனர்.
பவுலிங்கில் ஷெல்டன் காட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஹேடன் வால்ஷ், ஹோல்டர் ஆகியோரும் எதிரணியை அச்சுறுத்தக் காத்திருக் கின்றனர். எனவே, வெற்றிக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணியும் போராடும்.
பேபியன் ஆலன் இல்லை
முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் பேபியன் ஆலன் 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “பேபியன் ஆலன் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பு ஆகும். அவர் ஒரு மிகச்சிறந்த வீரர்” என்றார் அவர்.
அணிகள் விவரம்:
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே, ஸ்ரே யஸ் ஐயர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுவேந் திர சாஹல், தீபக்சாஹர், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி, சஞ்சு சாம்சன்.
மேற்கிந்தியத் தீவுகள்: பொலார்டு (கேப்டன்), பேபியன் ஆலன், பிரன்டன் கிங், தினேஷ் ராம்தின், ஷெல்டன் காட்ரெல், எவின் லீவிஸ், ஷெர்பான் ரூதர்போர்டு, ஷிம்ரன் ஹெட்மயர், காரி பியரி, லென்டில் சிம்மன்ஸ், ஜேசன் ஹோல்டர், ஹேடன் வால்ஷ், கீமோ பால், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டி20 தொடரை வெல்வதுதான் முக்கியம்: ரோஹித் சர்மா பேட்டி மும்பை: தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டி20 தொடரை வெல்வதுதான் முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா கூறினார். இதுகுறித்து இந்திய வீரர் ரோஹித் சர்மா, செய்தியாளர் களிடம் கூறியதாவது: டி20 உலகக் கோப்பைக்காக அணியைத் தயார் செய்து வருகிறோம் என்று மீண்டும் மீண்டும் நான் சொல்ல மாட்டேன். அதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது. உலகக் கோப்பை நடைபெற இன்னும் அதிக நாட்கள் உள்ளன. இப்போது நாங்கள் டி20 தொடரை வெல்ல முயற்சி செய்யவேண்டும். அது எங்களை நன்கு ஊக்கப்படுத்தும். நாங்கள் தொடர்ச்சியாக வெல்லும்போது அணியின் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பது தானாக அமைந்துவிடும். எனவே தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டி20 தொடர்தான் முக்கியம். பொல்லார்டு தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் பொல்லார்டுடன் நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியுள்ளேன். அவரது தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி புதிய வடிவம் பெற்றுள்ளது. போட்டி குறித்து சரியான திட்டமிடுதலுடன் அவர் களமிறங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார். |
நேரம்: இரவு 7 மணி
இடம்: மும்பை வான்கடே ஸ்டேடியம்
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT