Published : 10 Dec 2019 08:06 PM
Last Updated : 10 Dec 2019 08:06 PM
மும்பையில் நாளை நடைபெறும் 3-வது மற்றும் இறுதி டி20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இருக்கிறது.
ஆனால், கடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு பேட்டிங், பந்துவீச்சில் கடும் சவால் விடுத்த மே.இ.தீவுகள் நாளை ஆட்டத்திலும் கடுமையான சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
முதலாவது டி20 போட்டியில் 207 ரன்களைக் குவித்த மே.இ.தீவுகள் அணி, 2-வது டி20 போட்டியில் 170 ரன்களை அனாசயமாக எட்டி வெற்றி பெற்றது. பவர் ஹிட்டர்ஸ் அதிகம் இருக்கும் மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் இந்திய அணிக்கு நிச்சயம் சவாலாக இருக்கும்.
இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்று சமநிலையில் இருப்பதால், நாளை போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் குறித்துக் கவலைப்படும் அளவுக்கு இல்லை. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், மும்பை மைதானம் சொந்த மண் என்பதால், நிச்சயம் நாளை வானவேடிக்கை நிகழ்ததுவார் என நம்பலாம். கே.எல்.ராகுலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
கேப்டன் விராட் கோலி முதல் போட்டியில் வெளுத்து வாங்கினார், ஆனால் 2-வது ஆட்டத்தில் விரைவாக வெளியேறினார். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் கோலியின் தனித்தன்மை ஆட்டம் நிச்சயம் வெளிப்படும். இதுதவிர நடுவரிசையைபலப்படுத்த ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பது கூடுதல் வலுவாகும். கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தால் கலக்கிய ஷிவம் துபே சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். இவரின் ஆட்டம் நாளையும் தொடர்ந்தால் கூடுதல் பலம்.
நாளை ஆட்டத்தில் இந்திய அணியில் இரு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் பதிலாக சஞ்சு சாம்ஸன், குல்தீப் யாதவ் களமிறங்கக்கூடும்.
வாஷிங்டன் சுந்தரைப் பொறுத்தவரை கடந்த 6 டி20 போட்டிகளில் மொத்தம் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். 23 ஓவர்கள் வீசி 144 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இவரின் பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.
பீல்டிங்கிலும் வாஷிங்டன் சுந்தர் மந்தமாக செயல்படுகிறார்.கடந்த ஆட்டத்தில் சிம்மின்ஸுக்கு நழுவவிட்ட கேட்சால் ஆட்டமே மாறிப்போனது. ஆதலால், வாஷிங்டனுக்கு பதிலாக குல்தீப்யாதவ் களமிறக்கப்படலாம்.
ரிஷப் பந்துக்கு போதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், 4-வது வீரராக களமிறங்கிய ரிஷப் பந்த் 33 நாட்அவுட், 18,6,27,19,4 ஆகிய ரன்களை 7 போட்டிகளில் எடுத்துள்ளார். எந்த போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் விதத்தில் விளையாடவில்லை. கடைசியாக புரோவிடன்ஸில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக அரைசதம் அடித்தார் ரிஷப் பந்த். அதன்பின் பேட்டிங்கை மறந்த வகையில் விளையாடி வருகிறார்.
அதேசமயம், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வாய்ப்புக்காக சஞ்சு சாம்ஸன் காத்திருப்பதால், நாளை சாம்ஸன் களமிறங்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
இந்திய அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் கடந்த இரு போட்டிகளிலும் சுமார் ரகம் என்றுதான் சொல்ல முடியும். முதல் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 200 ரன்களுக்கு மேல் அடிக்க விட்டனர். 2-வது போட்டியிலும் 170 ரன்கள் எடுத்தும் பந்துவீச்சில் கட்டுப்படுத்த முடியவில்லை.
புவனேஷ்வர் குமார், தீபக் சஹர் இருவரும் ரன்களை வாரி வழங்குகின்றனர். ஆதலால், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக, முகமது ஷமி நாளை களமிறங்கக்கூடும். பீல்டிங்கிலும் இந்திய அணி கவனம் செலுத்துவது அவசியம் இல்லாவிட்டால் எவ்வளவு ரன்கள்அடித்தாலும் பயனில்லை.
இந்திய அணி நாளை பந்துவீச்சு, பீல்டிங்கைக் காட்டிலும் பேட்டிங்கை அதிகம் நம்பியே களமிறங்குகிறது.
மே.இ.தீவுகள் அணியைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு பந்துவீச்சு, பேட்டிங்கில் வலுவான சவால் விடுக்கும் வகையில் இருக்கிறார்கள். குறிப்பாகத் தொடக்க ஆட்டக்காரர்கள் சிம்மன்ஸ், லூயிஸ் மிரட்டலான ஃபார்மில்இருக்கிறார்கள். அதன்பின் பூரன், ஹெட்மயர் இருவரின் பேட்டிங்கும் எந்தநேரத்தில் வெடிக்கும் என்று கணிக்க முடியாது.
இது தவிர பிரான்டன் கிங், ஹோல்டர், பொலார்ட் ஆகியோர் அணிக்கு மிகப்பெரிய பலமாகும். குறிப்பாக ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பொலார்ட் விளையாடியபோது மும்பை மைதானத்தின் தன்மை குறித்து நன்கு அறிந்தவர். அது அவருக்குச் சாதகமாக அமையும்.
பந்துவீச்சில் ஜூனியர் வால்ஷ் கடந்த போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினார். வேகப்பந்துவீச்சில் காட்ரெல், வில்லியம்ஸ், ஹோல்டர் இந்திய அணிக்கு நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசக்கூடும். இந்திய அணியின் வசம் வெற்றி எளிதாகச் செல்லாத வகையில் நெருக்கடி அளிக்க மே.இ.தீவுகள் தகுதி படைத்ததாக இருக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதி நினைவுகள் மே.இ..தீவுகள் வந்துவிட்டால் உற்சாகமடைந்துவிடுவார்கள். ஆதலால் நாளை போட்டியில் இரு அணிகளும் கடும் கோதாவில் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை. நாளை இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT