Last Updated : 10 Dec, 2019 10:45 AM

1  

Published : 10 Dec 2019 10:45 AM
Last Updated : 10 Dec 2019 10:45 AM

உடல் ரீதியாக சரியாகி இந்திய அணிக்கு திரும்ப முடியும் ஆனால் மன ரீதியாக...: என்னதான் நடக்கிறது? ஹர்திக் பாண்டியா மனம் திறப்பு

மும்பை

ஹர்திக் பாண்டியாவின் மைதானத்துக்கு வெளியேயான நடவடிக்கைகள் பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் இந்திய அணியின் ஆல் ரவுண்டராக தன்னலமற்ற ஒரு வீரர் அவர் என்பதை மறுப்பதற்கில்லை.

அடுத்த ஆண்டு உலகக்கோப்பைக்குக் கூட ஹர்திக் பாண்டியா வர முடியாது என்ற நிலையில்தான் உள்ளது. உடலில் கத்திப் பட்ட பிறகே அது பலவீனமாகிவிடும் என்கிறார் ஹர்திக் பாண்டியா.

இந்நிலையில் தனக்கு நடந்த முதுகு அறுவை சிகிச்சை, மறுவாழ்வு செயல் திட்டங்கள் ஆகியவைப் பற்றி செய்தி நிறுவனம் ஒன்றிடம் மனம் திறந்துள்ளார்:

நான் என் முதுகை நன்றாகப் பரமாரித்து வருகிறேன், அறுவை சிகிச்சை பக்கம் சென்று விடக்கூடாது என்று எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் அனைத்தையும் முயன்ற பிறகு அது வேலைக்காகவில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகே அறுவைசிகிச்சைக்கு ஒப்புக் கொண்டேன். ஏனெனில் எனக்கும் அணிக்கும் நான் நியாயம் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. அப்போதுதான் அறுவை சிகிச்சை தேவை என்ற முடிவுக்கு வந்தேன்.

உள்ளபடியே கூற வேண்டுமெனில் இப்போது நான் நன்றாக உணர்கிறேன், முறையாக அனைத்தையும் செய்து வருகிறோம். அறுவை சிகிச்சை என்று வந்துவிட்டால் எதுவும் சுலபமல்ல. எனவே தான் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய உடல் நலம் குறித்து அனைத்துப் பகுதிகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் காயங்கள் என்பது நம் கைவசம் இல்லாதது. நாம் எவ்வளவு முயன்று காயமடைந்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தாலும் காயங்கள் வரவே செய்கின்றன. காயமே அடையமாட்டேன் என்று ஒருவரும் கூற முடியாது. இப்போதைக்கு மீண்டும் வருவது வலுவாக அமைய வேண்டும் என்று முயற்சிக்கிறேன்.

அறுவை சிகிச்சை செய்தால்தான் பிரச்சினை தீரும் என்பது முடிவானது, இதுதான் சரியான தருணம் என்று முடிவெடுத்தோம். இன்னும் ஒரு மாதம் சென்று கூட நான் அறுவை சிகிச்சை செய்திருக்கலாம், ஆனால் அது எனக்கு உதவியிருக்காது. முதுகில் வித்தியாசத்தை உணர்ந்தேன், அதனால் அதனுடன் தொடர முடியாது.

4 மாதங்கள் ஆனால் கூட நியூஸி. தொடருக்கு வந்து விடலாம் என்றுதான் நினைத்தேன். சில சர்வதேச போட்டிகள், ஐபிஎல் பிறகு உலக டி20 என்று நினைத்திருந்தேன். இப்போது உலக டி20 என்பது எனக்கு கவலையளிப்பதாக உள்ளது.

எப்போதும் காயமடைந்து மீண்டும் அணிக்கு வந்து கொண்டிருப்பது எளிதானதல்ல, அதற்கு உத்வேகம் தேவை. ஆம் எங்களுக்கு உத்வேகம் உள்ளது. ஆனால் தவறான வழியில் சென்று விடக்கூடாது. நான் மீண்டும் வருவதற்கு முயற்சிக்கிறேன், அதில் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன், ஒவ்வொரு முறையும் மீண்டும் அணிக்குள் வரும்போது என்னை அது வலுவாகவே மாற்றுகிறது. காயத்தினால் வெளியில் இருக்கும் காலக்கட்டத்தில் இவர் இதனைக் கற்றுக் கொண்டார் என்று என்னைப் பற்றி பேசப்படுவதை விரும்புகிறேன்.

உடல் ரீதியாக நான் எப்போதும் மீண்டும் அணிக்குள் வருவேன், ஆனால் மன ரீதியக ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம். உள்ளபடியே கூற வேண்டுமெனில் என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன, நானும் மனரீதியாக இதுவரை வலுவாகவே மீண்டு வந்துள்ளேன்.

ஆனால் மீண்டும் அணிக்குள் வருவதற்கு அவசரப்படக்கூடாது, உடல் சரியில்லை என்றால் வலுக்கட்டாயமாக மீண்டும் ஆடக்கூடாது. தயாரிப்பு தேவை. ஏனெனில் மீண்டும் உடைந்து விடக்கூடிய வாய்ப்புள்ளது. அதனால்தான் பொறுமை அவசியம் என்கின்றனர். காயங்கள் எளிதல்ல, ஆனால் பொறுமையாக இருப்பது மிக முக்கியம். பாட் கமின்ஸ் காயத்திலிருந்து மீண்டு மிகவும் வலுவாகத் திரும்பியுள்ளதைப் பார்க்கிறென். ஜஸ்பிரித் பும்ரா முழங்கால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளார்.

காயங்களிலிருந்து மீண்டு திரும்பி வருபவர்களிடம் நான் பேசி வருகிறேன், அப்போதுதான் எனக்குத் தெரிந்தது பொறுமை மிக மிக அவசியம் என்பது. கத்தி ஒருமுறை நம் உடலில் பட்டுவிட்டால் நம் உடல் பலவீனமடைந்து விடும். எனவே 200% அளிக்க முடிந்தால்தான் மீண்டும் திரும்பி வர வேண்டும்.

இப்போதைக்கு படிப்படியாக சில காரியங்களை செய்து வருகிறேன், ஆனால் பவுலிங், உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்பான வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. நிச்சயமாக வலுவாக மீண்டும் திரும்புவேன். கிரிக்கெட்டுக்குத் திரும்பிவிட்டால் அதிக கால அவகாசம் எடுக்காது. சர்வதேச கிரிக்கெட் தரத்துக்கு நான் மீண்டும் என்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

காயத்துக்குப் பிறகு நான் முந்தைய வீரராக இருப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் சிறந்த கிரிக்கெட் வீரராக வருவேன் என்று கருதுகிறேன். கிரிக்கெட் திறமைகளைப் பொறுத்தவரை நான் 14 வயது முதலே ஆடிவருவதால் கிரிக்கெட்டை நாம் மறந்து விட முடியாது, காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்புவது என்பதுதான் மிக மிக முக்கியம்.

இப்போதைக்கு என் உடல் மீதுதான் கவனம், விராட் கோலியை எடுத்துக் கொள்ளுஙள் நல்ல உடல் தகுதியுடைய விராட் கோலிதான் சிறந்த விராட் கோலி. இதுதான் உத்வேகம் என்பது.

உலக டி20-யில் ஆடி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது திட்டம். 2019 உலகக்கோப்பையை வருத்தத்திற்குரிய வகையில் தவற விட்டோம். ஆஸ்திரேலியாவில் நம் ஆட்டம் எடுபடு,. இம்முறை அணி கோப்பையை வெல்ல உதவி செய்ய ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு கூறினார் ஹர்திக் பாண்டியா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x