Published : 09 Dec 2019 01:32 PM
Last Updated : 09 Dec 2019 01:32 PM
வெற்றி பெறத்தான் இங்கு வந்தேன். ஆனால், எங்கள் அணியின் இளம் வீரர்கள் விளையாடியதைப் பார்த்தபோது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் கெய்ரன் பொலார்ட் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்
திருவனந்தபுரத்தில் நேற்று இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மே.இ.தீவுகள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. மூன்றாவது டி20 போட்டி மும்பை வான்கடேயில் நடைபெற உள்ளது.
ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியிலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்திலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பேட்டிங் சிறப்பான வகையில்தான் இருந்தது. ஹைதராபாத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்தபோதிலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் அதிரடியான பேட்டிங் அணிக்கு வெற்றி தேடித் தந்தது.
ஆனால், நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை 170 ரன்களில் சுருட்டி, அந்த இலக்கை 9 பந்துகள் மீதமிருக்கையில் மே.இ.தீவுகள் அணியினர் அடைந்தனர். குறிப்பாக சிம்மன்ஸ், லூயிஸ், பூரன் ஆகிய மூவரும் சேர்ந்து இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டனர்.
இந்த வெற்றி குறித்து மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது டி20 போட்டியில் எவ்வாறு பேட் செய் வேண்டும், பந்துவீச வேண்டும், போட்டியை எவ்வாறு அணுக வேண்டும் என்று ஆலோசித்து களமிறங்கினோமோ அதுபோலவே செயல்பட்டோம். எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.
கரீபியன் லீக் போட்டியில் சிறப்பாக பேட் செய்த, பந்துவீசி வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்கள், அவர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்களின் விளையாட்டு எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
என்னுடைய கிரிக்கெட் விளையாட்டை தொடர்ந்து அனுபவித்து விளையாடுகிறேன். நான் கிரிக்கெட்டில் கற்றுக்கொண்ட அனைத்தையும் இந்த இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பேன். நாங்கள் தொடர்ந்து இதேபோன்று ஒற்றுமையுடன் இருந்தால் தொடர்ந்து இதுபோன்றுவெற்றிகளைப் பெற முடியும்.
இந்த அணிக்கு கேப்டனாக இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. கடவுள் எனக்கு கிரிக்கெட் விளையாடும் அறிவை வழங்கியுள்ளார். நான் இங்கு வரும்போது வெற்றி பெறத்தான் வந்தேன், ஆனால், கேப்டனாகியபின் அந்த வேட்கை எனக்கு அதிகமாக, வலிமையடைந்திருக்கிறது.
ஆனால் இன்னும் சில விஷயங்களில் நாங்கள் திருத்திக்கொள்ள வேண்டும்.ப ந்துவீச்சில் அதிகமான வைடுகள்வீசுவது, நோபால் வீசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மும்பை போட்டியை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
இவ்வாறு பொலார்ட் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT