Published : 09 Dec 2019 08:17 AM
Last Updated : 09 Dec 2019 08:17 AM
சிம்மன்ஸ், லூயிஸ் காட்டடியால் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவிடம் தொடர்ந்து 7 டி20 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், இந்த முறை மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் மூன்றாவது முறையாக 170 ரன்களுக்கு மேல் இந்தியா நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக மே.இ.தீவுகள் அணி சேஸிங் செய்துள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. 171 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 9 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த சிம்மன்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பவர் ஹிட்டர்ஸ் பேட்ஸ்மேன்களை அதிகம் கொண்டிருப்பது மே.இ.தீவுகள் அணி. அந்த அணியில் இருக்கும் அளவுக்கு இந்திய அணியில் பவர் ஹி்ட்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் மிகக்குறைவு.
பவர்ஹிட்டர்ஸ்
திருவனந்தபுரம் போன்ற மெதுவான ஆடுகளத்தில் பவர் ஹிட்டர்ஸ் இருக்கும் அணிக்கு இந்திய அணி நிர்ணயித்த இலக்கு நிச்சயம் வலுவான சவாலாக இருக்காது. 200 ரன்களுக்கு மேல் இருந்திருந்தால் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முயறச்சித்திருக்கலாம்.
இந்திய அணியைப் பொறுத்தவரைக்கும் ஆறுதலான ஒரே விஷயம் ஷிவம் துபேவை 3-வது வீரராக களமிறக்கி சோதித்துப் பார்த்ததும், அவர் அடித்த அரைசதம்தான். மற்றவகையில் இந்த போட்டியி்ல் இந்திய அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும், பேட்டிங்கும் சொல்லும்விதத்தில் இல்லை.
இப்படியா ஆட்டமிழப்பது
குறிப்பாக ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி ஆகியோர் ஆட்டமிழந்தது வேடிக்கையாக இருந்தது. பந்துகள் மெதுவாக வரும் ஆடுகளத்தில் அதற்கு ஏற்றார் போல் பவர் ஹிட்டிங் தொணியில் பேட் செய்ய வேண்டும். ஆனால், ரோஹித் சர்மா லெக் ஸ்டெம்பை காட்டிக்கொண்டு ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று ஹோல்டர் பந்துவீச்சில் போல்டாகி விக்கெட்டை இழந்தார்.
அதேபோல, வில்லியம்ஸ் பந்துவீச்சில் இறங்கி வந்து அடிக்க கோலி முயன்றர். பந்து ஆப்-சைடு விலகிச் சென்றபோது அதை விட்டு இருந்தாலும் ஒன்றும் ஆகியிருக்காது. ஆனால் வில்லியம்ஸ் பந்தை அடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்டு மேனிடம் கேட்ச் கொடுத்தார்.
ரன் அடிக்க முடியாத விரக்தியில் ராகுல் ஸ்வீப் ஷாட்டில் ஆட்டமிழந்து சென்றார். இந்த 3 பேரும் வேண்டுமென்றே விக்கெட்டை பறிகொடுத்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது, இவர்கள் சென்றபோதே இந்திய அணியின் ஸ்கோர் படுத்துவிட்டது.
சாம்ஸன் ஏன் மறுக்கப்படுகிறார்?
உள்ளூரில் போட்டி நடக்கும் போது சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம். ஆனால், தொடர்ந்து ரிஷப்பந்துக்கு மட்டும் வாய்ப்பு வழங்கி சாம்ஸனை புறக்கணிப்பதை எவ்வாறு அணி நிர்வாகம் நியாயப்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.
வழக்கமாக ஸ்ரேயாஸ் அய்யரை 4-வது வீரராக களமிறக்குவார்கள், ஆனால், ரிஷப் பந்த்தை அந்த இடத்தில் இறக்கி, ஸ்ரேயாஸ் அய்யரை பின்னுக்கு தள்ளிவிட்டனர். நடுவரிசையைப் பலப்படுத்த ஸ்ரேயாஸ் அய்யர் கொண்டுவரப்பட்ட நிலையில் ரிஷப் பந்துக்குக்கு அணியில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு வேறு ஏதேனும் புறஅழுத்தம் காரணமா என்ற கேள்வியும் எழுகிறது.
கோலிக்கு அழகா?
தன்னைப் பார்த்து கிரிக்கெட் பழகும் இளம் வீரர்களுக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கும் கேப்டன் விராட் கோலி உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், எதிரணி வீரர்களை எதிரி அணி போல பார்ப்பதும், சீண்டுவதும் ஆரோக்கியமானது அல்ல.
தோனி, கங்குலி போன்ற சிறந்த கேப்டன்கள் வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகவே பாவித்தார்கள். அதிலும் தோனி தோல்வியின் சோகத்தை வெளிப்படுத்தவே மாட்டார். ஆனால், தோனியிடம் கேப்டன்ஷிப் பழகிய கோலி எதிரிணியிடம் நடக்கும் முறையும், ஆக்ரோஷத்தை காட்டுவதும் அழகல்ல.
முதல் போட்டியில் வில்லியம்ஸிடம் கோலி நடந்து கொண்ட முறையும், இந்த போட்டியில் கோலி ஆட்டமிழந்தபோது வில்லியம்ஸ் நோட்புக் சைகை ஏதும் காட்டாமல் ரசிகர்களைப் பார்த்து அமைதியாக இருக்கும்படி வாயில் விரல்வைத்த சைகையும் பதிலடியாகவே பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
கோட்டைவிட்ட கேட்சுகள்
இந்திய அணியின் பீல்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. சிம்மன்ஸ், லூயிஸ்க்கு வாஷிங்டன் சுந்தரும், ரிஷப் பந்தும் கோட்டைவிட்ட கேட்சுகளால் அவர்கள் அதை நன்கு பயன்படுத்தி நங்கூரமிட்டனர். ஐபிஎல் ஏலம் நடக்கப்போவதால், இருவரும் தங்களின் அதிரடியை வெளிக்காட்டிவிட்டார்கள்.
பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசினார். மற்றவகையில் புவனேஷ்வர் குமார், சாஹர், சாஹல், ஜடேஜா அனைவரின் பந்துவீச்சும் நேற்று எடுபடவில்லை, நொறுக்கி அள்ளிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் இரவுநேரப் பனி பந்துவீச்சில் பாதிப்பு ஏற்படுத்த முக்கியக் காரணமாகிவிட்டது.
சிம்மன்ஸ், லூயிஸ் காட்டடி
மே.இ.தீவுகள் அணியைப் பொறுத்தவரைக்கும் அந்த அணி பவர் ஹிட்டர்ஸ் இருக்கும் அணி என்பதை நிரூபித்துவிட்டது. சிம்மன்ஸ்(67 4 சிக்ஸர்,4 பவுண்டரி 45 பந்துகள்), லூயிஸ்(40) இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார்கள். திருவனந்தபுரம் போன்ற மெதுவான ஆடுகளங்களில் எவ்வாறு அடித்து ஆடுவது என்பதை பாடமாகவே எடுத்துவிட்டனர்.
அதிரடியாக ஆடிய சிம்மன்ஸ் 38 பந்துகளில் தனது 12-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.
இந்தியாவுக்கு எதிராக கடைசியாக 2016-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி அரையிறுதியில் அரைசதம் அடித்த சிம்மனஸ்அதன்பின் இப்போதுதான் அடித்தார்
இதில் லூயிஸ், ஹெட்மயர்(23) ஆட்டமிழந்தநிலையில் அடுத்துவந்த பூரணும் கடைசிவரை களத்தில் நின்று விளாசிவிட்டார். 18 பந்துகளை மட்டுமே சந்தித்த பூரண் 2 சிக்ஸர்கள், 4பவுண்டர்கள் உள்ளிட்ட 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்றது.
துபே ஆறுதல்
முன்னதாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ராகுல்(11), ரோஹித் சர்மா(15), விராட் கோலி(19) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்ளிட்ட 30 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பொலார்ட் பந்துவீச்சில் ஷிவம் துபே அடித்த 3 சிக்ஸர்களும் அற்புதம். அடுத்த ஆண்டு ஆஸி. உலகக்கோப்பைக்கு ஆல்ரவுண்டர் அடையாளம் காணப்பட்டுள்ளாார்.
ஸ்ரேயாஸ் அய்யர்(10), ஜடேஜா(9), சுந்தர்(0) என கடைசி வரிசையில் விரைவாக வெளயேறினர். ரிஷப்பந்த் 33 ரன்களுடனும், சாஹர் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்
மே.இ.தீவுகள் தரப்பில் ஜூனியர் வால்ஸ், வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT