Published : 04 Dec 2019 02:38 PM
Last Updated : 04 Dec 2019 02:38 PM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளில், பேட்ஸ்மேனுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை முடிந்து மீண்டும் டெஸ்ட் போட்டி விளையாட வந்த பின் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தர வரிசையில் கோலியின் முதலிடத்தைக் காலி செய்து முதலிடம் பிடித்தார். இப்போது அவரைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் கோலி முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.
கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது, விராட் கோலி 136 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக டெஸ்ட் தர வரிசையில் 928 புள்ளிகள் பெற்று கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஸ்மித் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்கோர் செய்யாததால் தர வரிசையில் முதலிடத்தைத் தக்க வைக்க முடியாமல் 2-வது இடத்துக்கு 923 புள்ளிகளோடு சரிந்தார்.
ஆனால், விராட் கோலி தர வரிசையில் முதலிடத்தை எத்தனை நாட்கள் தக்கவைப்பார் என்று உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால் டிசம்பர் மாதம் வரை இந்திய அணி எந்தவிதமான டெஸ்ட் போட்டியிலும் விளையாடப் போவதில்லை. ஜனவரி மாதம் நியூஸிலாந்து சென்றுதான் விளையாட உள்ளது. அதுவரை டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்க மாட்டார்.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்குப் பயணிக்க உள்ள நியூஸிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தப் போட்டிகளில் ஸ்மித் சிறப்பாக பேட் செய்யும் பட்சத்தில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. தற்போது கோலிக்கும், ஸ்மித்துக்கும் இடையே 5 புள்ளிகள் மட்டுமே இடைவெளி இருக்கிறது. ஆதலால் எளிதாக முதலிடத்தை ஸ்மித் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், வரும் காலத்தில் ஸ்மித்துக்கும் கோலிக்கும் இடையே தர வரிசையில் முதலிடத்தைப் பிடிப்பதில் தொடர்ந்து போட்டிகள் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் முச்சதம் அடித்ததால், தர வரிசையில் 12 புள்ளிகள் உயர்ந்து, டாப் 10 வரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேசமயம், இந்திய வீரர் ரஹானே ஒரு இடம் சரிந்து 6-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார்.
அதேபோல ஆஸ்திரேலிய வீரர் லாபுசாங்கே பாகிஸ்தானுக்கு எதிராகச் சதம் அடித்ததால், தர வரிசையில் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தர வரிசையில் 110-வது இடத்தில் இருந்த லாபுசாங்கே, தற்போது 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்
இந்திய வீரர் சட்டேஸ்வர் புஜாரா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறார். நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தர வரிசையில் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஷம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததால், தர வரிசையில் 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்
பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் நீடிக்கிறார். பும்ரா (794) 5-வது இடத்திலும், 9-வது இடத்தில் அஸ்வினும் (772), 10-வது இடத்தில் முகமது ஷமியும் (771) உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT