Published : 02 Dec 2019 04:13 PM
Last Updated : 02 Dec 2019 04:13 PM
நாதன் லயானின் மாயஜால சுழற்பந்துவீச்சால் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது ஆஸ்திரேலிய அணி.
தொடர் நாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.
பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோர் மிகப்பெரிய சேதாரத்தை பாகிஸ்தானுக்கு அளித்ததால், ஆஸ்திரேலிய அணி, இன்னிங்ஸ் 5 ரன்களில் வென்றது.
இப்போது 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்களில் பாகிஸ்தானை வென்று 2-0 என்ற கணக்கில் ஆஸி. டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தாமல் இருந்த நாதன் லயான் முதல் முறையாக இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அடிலெய்டில் 50-வது விக்கெட்டை லயான் வீழ்த்தியது மட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டியில் 16-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வார்னரின் 335 ரன்கள், லாபுசாங்கேவின் சதம் ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் 302 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இதனால், 287 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இருந்ததால், பாலோ ஆன் வழங்கியது ஆஸ்திரேலிய அணி. ஆனால், பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸில் 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
3-வது நாள் ஆட்டத்தில் ஹேசல்வுட், ஸ்டார்க் விக்கெட்டுகளை எடுத்த நிலையில், 4-வது நாள் முழுவதும் லயானின் ராஜ்ஜியமே இருந்தது. நண்பகலில் பந்துகள் நன்றாக எழும்பி வந்ததால், வேகப்பந்து வீச்சை எளிதாக சமாளித்து பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினார்கள்.
ஆனால், நாதன் லயான் பந்து வீச வந்தபின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின.
முன்னதாக, நேற்றைய 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்த்திருந்தது. 4-வது நாளான இன்று ஷான் மசூத் 14 ரன்களிலும், ஆசித் ஷாபிக் 8 ரன்களிலும் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய ஷா மசூத் அரை சதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்த சிறிது நேரத்தில் ஆசித் ஷாப் 57 ரன்னில் லயான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய இப்திகார் அகமது (27) ரன்களில் லயான் பந்துவீச்சில் லாபுசாங்கேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முகமது ரிஸ்வான், யாசிர் ஷா ஓரளவுக்குக் களத்தில் நின்றனர்.
முகமது ரிஸ்வான் 45 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹேசல்வுட் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். 201 ரன்களுக்கு 6 -வது விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான். ஆனால், அடுத்த 4 விக்கெட்டுகளை 38 ரன்களில் விரைவாக இழந்து தோல்வி அடைந்தது.
கடைசி வரிசை வீரர்களான யாசிர் ஷா 13, ஷாகின்ஷா அப்ரிதி (1),முகமது அப்பாஸ் (1) ரன் அவுட் என சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸ் 239 ரன்களில் முடிவுக்கு வந்து 48 ரன்களில் தோல்வியைத் தழுவியது.
ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயான் 5 விக்கெட்டுகளையும், ஹசல்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT