Published : 02 Dec 2019 10:50 AM
Last Updated : 02 Dec 2019 10:50 AM

இந்திய அணி வீரர் மணிஷ் பாண்டேவுக்கு இன்று திருமணம்: தமிழ் திரைப்பட நடிகையை மணக்கிறார்

இந்தியஅணி வீரர் மணிஷ் பாண்டே : கோப்புப்படம்

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கர்நாடகாவைச் சேர்ந்தவருமான மணிஷ் பாண்டேவுக்கும், தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை அஷ்ரிதா ஷெட்டிக்கும் மும்பையில் இன்று திருமணம் நடக்கிறது.

மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடக்கும் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் மட்டும் பங்கேற்கின்றனர்.

மணிஷ் பாண்டே மணக்க இருக்கும் நடிகை அஷ்ரிதா ஷெட்டி, தமிழில் நடிகர் சித்தார்த் நடித்து வெளியான உதயம் என்ஹெச்4, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இரு குடும்பத்துக்கும் இடையிலான திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளியில் அதிகமாகக் கசியவிடப்படாமல் இருந்த நிலையில் திருமணத் தேதி உறுதியானபின் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக அணிக்காகவும், இந்திய அணியிலும் மணிஷ் பாண்டே விளையாடி வருகிறார். சயித் முஷ்டாக் அலி டி20 தொடரில் சூரத் நகரி்ல் நேற்று இறுதி ஆட்டம் நடந்தது. இதில் தமிழகத்தை ஒரு ரன்னில் வீழ்த்திய சாம்பியன் பட்டத்தை கர்நாடக அணி தக்கவைத்தது.

கர்நாடக அணியின் கேப்டனான மணிஷ் பாண்டை அரைசதம் அடித்து 40 பந்துகளில் 60 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மிகவும் பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் தமிழகம் ஒரு ரன்னில் கோப்பையை இழந்தது. ஏற்கனவே கடந்த மாதம் விஜய் ஹசாரே கோப்பையிலும் கர்நாடக அணியிடம் இறுதிப்போட்டியில் தமிழகம் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்குப்பின் மணிஷ் பாண்டே நிருபர்களிடம் கூறுகையில், " இந்திய-மே.இ.தீவுகள் தொடரை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். அதற்கு முன்பாக நாளை எனக்கு மும்பையில் திருமணம். சூரத்தில் இருந்து நேரடியாக மும்பைக்குச் செல்கிறேன்" எனத் தெரிவித்துச் சென்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x