Published : 30 Nov 2019 06:51 PM
Last Updated : 30 Nov 2019 06:51 PM
அடிலெய்டில் நடந்து வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. இன்னி்ங்ஸ் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது.
வார்னரின் முச்சதம், லாபுசாங்கேயின் சதம் ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்இழப்புக்கு 96 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் பாபர் ஆசம் 43 ரன்களுடனும், யாசிர் ஷா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியைக்காட்டிலும் 493 ரன்கள் பின்தங்கியுள்ளது பாகிஸ்தான் அணி. நாளை நிச்சயம் முதல் இன்னிங்ஸில் விரைவாக ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெறவே வாய்ப்பு அதிகம். மின்னொலியில் பிங்க் நிறப்பந்தில் வேகப்பந்துவீச்சை சமாளிக்க தடுமாறும் பாகிஸ்தான் அணி, இன்னிங்ஸ் தோல்வி அடைந்தாலும் வியப்படைய வாய்ப்பில்லை.
இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் எப்படி தாக்குப்படிக்கப்போகிறது என்பது சந்தேகம்தான்.
பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்(லெக்ஸ்பின்னர்) யாசிர் ஷா இரு டெஸ்ட் போட்டிகளிலும் இவரின் பந்துவீச்சுதான் அனைவரின் வியப்பாக பார்க்கவைத்துள்ளது(இப்படி ஒரு பவுலரா!). இரு டெஸ்ட் போட்டிகளிலும் யாசிர் ஷா ஏகத்துக்கும் ரன்களை வாரி வழங்கியுள்ளார் .
பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் 32 ஓவர்கள் வீசிய யாசிர் ஷா ஒரு மெய்டன் எடுத்து, 197 ரன்களை தாராளமாக வழங்கியுள்ளார். ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்றவில்லை. ஆஸ்திரேலிய அணி சேர்த்த ரன்களில் மூன்றில் ஒருபகுதி ரன்களை யாசிர் ஷா மட்டுமே வழங்கி மோசமாக பந்துவீசியுள்ளார். இந்தப் போட்டியில் முச்சதம் அடித்த டேவிட் வார்னர் மட்டும் யாசிர் ஷா பந்துவீச்சில் 111 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மட்டும் தனது அணியை டிக்ளேர் செய்வதாக அறிவிக்கவில்லை என்றால் யாசிர் ஷா நிச்சயம் 200 ரன்களை வாரி வழங்கியிருப்பார்.யாசிர் ஷா பந்துவீச்சில் இரட்டை சதம்அடிக்காமல் தப்பித்தது டிம் பெய்ன் முடிவால்தான்.
பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தே யாசிர் ஷாவின் மோசமான பந்துவீச்சும், ரன்களை வாரி வழங்குதலும் தொடர்ந்து வருகிறது. முதல் டெஸ்டில் ஏறக்குறைய 48.4 ஓவர்கள் வீசிய யாசிர் ஷா 205 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அடிலெய்டில் இப்போது நடந்து வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பாகி்ஸ்தான் 2-வது இன்னிங்ஸில் பந்துவீசப் போவதில்லை. அப்படியிருக்கும் போது யாசிர் ஷாவின் பந்துவீச்சு இருடெஸ்ட் களிலும் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறலாம்.
இரு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 80.4 ஓவர்கள் வீசிய யாசிர் ஷா 402 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். யாசிர் ஷாவின் பந்துவீச்சு சராசரி இந்த தொடரில் 100.5 என்பது வியப்பாக இருக்கிறது. அதாவது யாசிர் ஷா தான் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் வழங்கியுள்ளார்.
யாசிர் ஷா மோசமாகப் பந்துவீசுவது இந்த முறை மட்டுமல்ல கடந்த 2016-17-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் அணி பயணம் வந்தபோதும் இதேபோன்றுதான் மோசமாக வீசியுள்ளார். அப்போது, மெல்போர்ன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில்ஒரேஇன்னிங்ஸில் யாசிர் ஷா 207 ரன்களை வாரி வழங்கினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் யாசிர் ஷா விளையாடியுள்ளார்.இதில் மொத்தம் 12 விக்கெட்டுகளையும், ஒட்டுமொத்தமாக ஆயிரத்து74 ரன்களையும் தராளமாகக் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் யாசிர் ஷாவின் பந்துவீச்சு சராசரிஎன்பது 89.5 சதவீதமாகும்.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் யாசிர் ஷா மட்டும் மோசமாகப் பந்துவீசவில்லை. சக வீரர்களான முகமது மூசா 20 ஓவர்கள் வீசி114 ரன்கள் வாரி வழங்கினார். முகமது அப்பாஸ் 29 ஓவர்கள் வீசி 100 ரன்களை அள்ளிக்கொடுத்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு இந்த டெஸ்டில் 'பல்லைக்காட்டி'விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT