Last Updated : 29 Nov, 2019 09:54 PM

 

Published : 29 Nov 2019 09:54 PM
Last Updated : 29 Nov 2019 09:54 PM

6 பந்துகளுக்கு 5 விக்கெட்: சயத் முஷ்டாக் அலி போட்டியில் கர்நாடக பந்துவீச்சாளர் புதிய சாதனை: டி20 போட்டியில் புதிய மைல்கல்

கர்நாடக வீரர் அபிமன்யு மிதுன்

சூரத்

ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய அபிமன்யு மிதுனின் அபாரமான பந்துவீ்ச்சு சாதனையால் சூரத் நகரில் இன்று நடந்த சயத் முஷ்டாக் அலி டி20 போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஹரியானாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்டாநாடக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

கர்நாடக மிதவேகப்பந்துவீச்சாளர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 வரலாற்றில் சாதனை புரிந்த முதல் இந்திய வீரர் எனும் முத்திரை பதித்தார்.

உலக அளவில் 2-வது வீரர் அபிமன்யு ஆவார். இதற்குமுன் வங்கதேச வீரர் அல்-அமின் ஹூசைன் இதேபோன்று ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அபிமன்யு மிதுன் உள்நாட்டில் நடக்கும் முக்கியப் போட்டிகளான ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே, சயத் முஷ்டாக் அலி கோப்பை ஆகிய மூன்றிலும் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் படைத்தார்.

ரஞ்சிக் கோப்பையில் 2009-ம் ஆண்டு உ.பி. அணிக்கு எதிராக மிதுன் ஹாட்ரிக் வீழ்த்தினார். அதன்பின் கடந்த மாதம் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணிக்கு எதிராக 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய மிதுன், தற்போது முஷ்டாக் அலி கோப்பையில் ஹாட்ரிக் வீழ்த்தியுள்ளார்.

முதலில் பேட் செய்த ஹரியானா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. 195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கர்நாடக அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 195 ரன்கள் சேர்்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த ஹரியானா அணிக்கு ராணா(33பந்துகள் 61ரன்கள்)பிஷோய்(55ரன்கள்) நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். 15 ஓவர்கள் முதல் 19 ஓவர்களில் 57 ரன்களை ஹரியானா சேர்த்தது. இதனால் ஸ்கோர் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் என்று 19 ஓவர்களில் இருந்தது.

20-வது ஓவரை மிதுன் வீசினார். ஏற்கனவே மிதுன் 3 ஓவர்கள் வீசி 38 ரன்கள் வாரி வழங்கியிருந்தார். வேறுவழியி்ல்லாமல் மீண்டும் மிதுனுக்கு ஓவர் வழங்கினர் ஆனால் தன்னுடைய பந்துவீச்சால் ஆட்டம் தலைகீழாமாக மாறப்போகிறது என அவருக்குத் தெரியவில்லை.

ராணா 61, திவேஷியா 32 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

முதல்பந்து: மிதுன் வீசிய பந்தை ராணா எதிர்கொண்டு அதை “கவ் கார்னருக்கு” தட்டி விட்டார், அங்கு அகர்வால் கேட்ச் பிடித்து ராணாவை 61 ரன்னில் வெளியேற்றினார்

2-வது பந்து: 2-வதுபந்தை திவேஷியா எதிர்கொண்டார். இந்த பந்தை லாங்-ஆன் திசையில் தட்டிவிட, அது கருண் நாயர் கையில் தஞ்சமடைய 32 ரன்னில் ஆட்டமிழந்தார்

3-வது பந்து: களமிறங்கிய சுமித் குமார், 3-வது பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டபோது மெதுவாக வீசப்பட்ட அந்தபந்து ஷார்ட் ஃபைன் லெக்திசையில் ராஹோன் காடம் கேட்ச்பபிடித்தார். சுமித் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். 'ஹாட்ரிக்' விக்கெட்டை மிதுன் வீழ்த்தினார்

4-வது பந்து: அடுத்து வந்த அமித் மஸ்ரா 4-வது பந்தை கவர்திசையில் அடிக்க கவுதமிடம்கேட்சாக மாறியது. 4-வது விக்கெட்டாக மிஸ்ரா வெளியேறினார். 5-வது பந்து வைடாக அமைந்தது. 5-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது

6-வது பந்து: 6-வதுபந்தை ஜெயந்த் யாதவ் ஆப்-ைசடில் விலகிச் சென்ற பந்தை அடிக்க முற்பட விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் ஸ்டெம்பிங் செய்து ஜெயந்த் யாதவை ஆட்டமிழக்கச் செய்தார். கடைசியில் 6 பந்துகளில் ஹரியானா 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஒருகட்டத்தில் 193 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த ஹரியானா, ஒரே ஓவரில் ஆட்டம் தலைகீழாக மாறி, ஒரு ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது ஹரியானா. கர்நாடக தரப்பில் மிதுன் 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கர்நாடக அணி களமிறங்கியது.தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல்(66ரன்கள் 4பவுண்டரி,6சிக்ஸர்), தேவ்தத் படிக்கல்(87 ரன்கள் 11பவுண்டரி,4சிக்ஸர்கள்) முதல்வி்க்கெட்டுக்கு 9.3 ஓவர்களில் 123 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

ராகுல் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மயங்க் அகர்வாலுடன் சேர்ந்த படிக்கல் இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். படிக்கல் 87 ரன்களில் வெளியேறினார். மயங்க் அகர்வால் 30 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறவைத்தார்.

15 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து, கர்நாடக அணி195 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x