Published : 23 Nov 2019 05:39 PM
Last Updated : 23 Nov 2019 05:39 PM
கொல்கத்தாவில் நடந்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இந்தியா 89.4 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது. சாஹா 17 ரன்னிலும், ஷமி 10 ரன்னிலும் களத்தில் இருந்தபோது டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவி்த்தார்
வங்கதேச அணியைக் காட்டிலும் 241 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி இஷாந்த் சர்மா வேகத்தில் 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்னும் இன்றைய ஆட்டத்தில் 44 ஓவர்கள் மீதம் இருப்பதால், இன்றே ஆட்டம் முடிவுக்கு வந்துவிடுமா அல்லது நாளை வரை ஆட்டம் இழுக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த விராட் கோலி, இந்தப் போட்டியில் விஸ்ரூபமெடுத்து பேட் செய்து வருகிறார். அபாரமாக ஆடிய விராட் கோலி, டெஸ்ட் போட்டியில் தனது 27-வது சதத்தையும், கேப்டனாக 20-வது சதத்தையும் நிறைவு செய்தார்.
இவருக்குத் துணையாக பேட் செய்த துணை கேப்டன் ரஹானே தொடர்ந்து 4-வது முறையாக அரை சதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோமினுள் ஹக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களில் வங்கதேசம் ஆட்டமிழந்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில், 46 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது.
இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்ததது. முதல் நாளான நேற்று 174 ரன்களும், இன்று 173 ரன்களும் இந்திய அணி சேர்த்தது
இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், வங்கதேசம் அணி இந்திய அணியின் 241 ரன்கள் முன்னிலையை முறியடித்து, அதன்பின் அந்த அணி முன்னிலை ஸ்கோரை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் ஆட்டம் அமையும்.
ஆனால், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மூம்மூர்த்திகள் ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் பந்துவீச்சுக்கு முதல் இன்னிங்ஸில் தாக்குப்பிடிக்காத வங்கதேச அணியின் எவ்வாறு 2-வது இன்னிங்ஸில் சமாளிக்கப் போகிறார்கள் என்பது சந்தேகமே.
ஏனென்றால், அடுத்த 3 நாட்களில் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பவுன்ஸர்களாகவும், லைன் லென்த்தில் வீசும்போது வங்கதேச பேட்ஸ்மேன்களால் சமாளித்து பேட் செய்துவது மிகக் கடினமாக இருக்கும்.
குறிப்பாக மாலை நேரத்தில் பந்துவீச்சு எந்த அளவுக்கு சவாலாக இருக்குமோ அதே அளவுக்கு பேட்டிங்கும் கடினமாக இருக்கும். ஆனால், இன்னும் மின்னொளியில் பிங்க் பந்தில் விளையாடாத வங்கதேச பேட்ஸ்மேன்கள் இன்று மின்னொளியில் விளையாட உள்ளார்கள்.
முதல் இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளர்களு்க்கு எந்தவிதமான சிரமமும் இன்றி வேகப்பந்துவீச்சாளர்களே அனைத்து விக்கெட்டுகளையும் அள்ளிச் சென்றனர். இதில் இருவருக்கு ஹெல்மட்டில் பந்துபட்டு காயம் ஏற்பட்டது. லிட்டன் தாஸ், கன்கஸன் முறையில் வெளியேறி மாற்றுவீரர் வந்துள்ளார். ஆதலால், மாலை நேரத்தில் இந்திய அணி வீரர்களின் வேகப்பந்து வீச்சை சமாளிப்பது வங்கதேச வீரர்களுக்கு சவாலாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT