Published : 21 Nov 2019 05:27 PM
Last Updated : 21 Nov 2019 05:27 PM
பகலிரவு டெஸ்ட், பிங்க் பந்து பயன்பாடு, வெற்றி குறித்த இலக்கு எல்லாம் சரிதான், ஆனால்,கிரிக்கெட்டின் தரம் எந்தவிதத்திலும் சமரசம் செய்துகொள்ளப்படக்கூடாது என்று லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்தப்பட உள்ளது. இதுவரை இந்திய அணி பிங்க் பந்தில், பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் முதல்முறையாக விளையாட உள்ளது.
பிங்க் பந்தில், பகலிரவாக நடத்தப்படுவது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் இந்த டெஸ்ட் போட்டியை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்கள். வங்கதேசம், இந்திய அணிகள் முதல்முறையாக பிங்க் பந்தில், பகலிரவு ஆட்டத்தில் விளையாடுகின்றன.
ஒருபுறம் அதிகமான வர்த்தக நோக்கத்துக்கு முக்கியத்துவம், மறுபுறம் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதுவரை இரு அணிகளின் வீர்ர்களும் பகலிரவு டெஸ்டில் விளையாடியது இல்லை.
இரவுநேரத்தில் பனிப்பொழிவு, பந்தின் தன்மை மாறுதல், பீல்டிங் செய்தலில் சிரமம், பந்துவீச்சில் சிரமம், பேட்ஸ்மேன்களுக்கு பந்தை கணித்துவிளையாடுவதில் ஏற்படும் சிக்கல் போன்றவற்றை எதிர்கொள்ள இருக்கிறார்கள். அதேசமயம், உலக அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தங்களை மாற்றிக்கொள்ளும் போது அதற்கு ஏற்றார்போல் இந்திய அணியும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்து லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
பகலிரவு டெஸ்ட் போட்டியின் முழுமையான விஷயம் அரங்கு நிறைய ரசிகர்களைக் கொண்டு வருவதும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய அம்சத்தைச் சேர்ப்பதும்தான். இவை இரண்டும் முக்கியம்தான்.
அதேசமயம் நான் நினைப்பது என்னவென்றால், போட்டி முடிந்தபின் எவ்வளவு பனி மைதானத்தில் விழுந்திருக்கிறது அங்கே கிரிக்கெட் அல்லது தரமான விளையாட்டு சமரசம் செய்யப்படுகிறதா என்பதை மதிப்பிட வேண்டும். அதாவது போட்டி முடிந்தபின் ஒவ்வொரு விஷயத்தையும் குறித்தும் ஆலோசிக்க வேண்டும்
இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இரு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவது அதிகமான பார்வையாளர்களை அழைத்து வருவது, அதேநேரத்தில் கிரிக்கெட்டின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதாகும். பந்து பனியால் ஈரமாகும்போது, போட்டி தொடங்கியதும் பாதிக்கப்படும். அந்த நேரத்தில் நாம் அமர்ந்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். இவை இரண்டும் ஒன்றிணைந்தால் வெற்றிதான்.
ஆனால், சிலநேரங்களில் பனிப்பொழிவு இருந்து, சில காரணங்களால் தரமான கிரிக்கெட்டை வழங்க முடியாவிட்டால், போட்டி முடிந்தபின் போட்டி குறித்தும், விளையாட்டின் தரம் குறித்தும் விவாதிக்க வேண்டும்.
பகலிரவு டெஸ்ட் போட்டி நல்ல விஷயம்தான். நாங்களும் புதிய விஷயங்களை முயற்சிக்கும் நாடு என்ற ரீதியில் வெளிப்படுத்த வேண்டும். நாம் முயன்று, அதன்பின் அது வெற்றியா அல்லது தோல்வி என்பதைப் பார்க்கலாம். அரங்கில் எத்தனை ரசிகர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை வைத்து வெற்றியை மதிப்பிடக்கூடாது. ஆனாலும், வெற்றியை மதிப்பிடுவதில் அதுவும் ஒரு அளவுகோல்.
பொதுவாகக் கடினமான, புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்களால் அதிகமாகச் சாதிக்க முடியாது என்று வீரர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணித்த போது, பெர்த் நகரில் உள்ள புதிய மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு தான் நன்றாக ஒத்துழைக்கும். ஆனால், அங்குச் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன்தான் சிறப்பாகப் பந்துவீசினார். 146 ரன்களில் இந்தியாவை ஆஸ்திரேலியா வென்றது.
இந்தியாவில் பகலிரவு போட்டிகளில் பிங்க் பந்து இதுவரை பயன்படுத்தப்படவில்லை. புதிய விஷயங்களை நாம் சோதிக்கும்போது அதுதான் எப்போதும் முதல்முறையாக இருக்கும்.
நமது இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள், அனைவருமே 140 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடியவர்கள். அனைத்து நேரத்திலும் இவர்கள் 140 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடியவர்கள் இல்லை என்றாலும், நன்றாக பந்துவீசக்கூடியவர்கள். வேகப்பந்துவீச்சு தரம் சிறப்பாக இருக்கிறது. அவர்கள் பந்தை பிட்ச் செய்யும் விதம், துல்லியத்தன்மை மனநிறைவாக இருக்கிறது.
இதுவரை சிறப்பாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு உடற்தகுதி மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன். நீங்கள் உடற்தகுதியுடன் இருந்தால், நீண்ட ஓவர்கள் வீச முடியும். பெரும்பாலான அணிகள் நீண்டநேரம் பேட்டிங் செய்யமுடியாத சூழல்தான் இருக்கிறது. யாராவது ஒருநாள் முழுவதும், அல்லது அரைநாள் பேட்டிங் செய்கிறார்களா
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT