Published : 19 Nov 2019 03:22 PM
Last Updated : 19 Nov 2019 03:22 PM
கொல்கத்தாவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் பகலிரவு போட்டியாக வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, இதற்கான பயிற்சியில் இந்திய மற்றும் வங்கதேச வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தூர் டெஸ்ட் போட்டியில் மொகமட் ஷமி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் இதுவரை அவர் எட்டாத இடம் கிடைத்தது.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்சில் நெரோலாக் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷமி, கவுதம் கம்பீர், சுனில் கவாஸ்கர் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
மொகமட் ஷமி கூறும்போது, “பவுலர்கள் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பிட்ச். அது எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பொறுத்து வீச வேண்டும். பிட்ச் மெதுவாக இருந்தால் என் தரப்பிலிருந்து முயற்சிகள் வலுவாக இருக்கும் பேட்ஸ்மென் திணறினால் நான் முழு ஆதிக்கம் செலுத்த முயல்வேன். ஆகவே லெந்த் மாறிக் கொண்டேயிருக்க வேண்டும்.” என்றார்.
மயங்க் அகர்வாலை புகழ்ந்து தள்ளிய சுனில் கவாஸ்கர், அகர்வால் போகப்போக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எதிரணியினர் அவரது பேட்டிங் உத்திகளைக் கவனிக்கத் தொடங்கி விடுவார்கள், எனவே அவருக்கு எதிரான உத்திகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார், “டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் மகிழ்வுடன் ஆடிவருகிறார், அவரது பேட்டிங்கின் முதல் ஆண்டில் இருக்கிறார்.
2ம் ஆண்டிலும் அவர் இதே போல் ரன்கள் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், ஆனால் போகப்போக எதிரணியினர் அவரது பேட்டிங் தரவுகளை அலசி ஆராய்ந்து ஒர்க் அவுட் செய்ய முயற்சிப்பார்கள் எனவே அப்போது எச்சரிக்கைத் தேவை.
ஆனால் இப்போதைக்கு அவர் பேலன்ஸ் பிரமாதம், முன்காலில் சென்று ஆடும்போதும் பின் காலில் நகர்ந்து ஆடும்போதும் பேலன்ஸ் அருமை, ஆஃப் திசையில் சாய்வதில்லை. நேராக ஆடுகிறார். எனவே தன்னம்பிக்கை மிக்கவராகத்தான் இருக்கிறார்” என்றார் சுனில் கவாஸ்கர்.
கவுதம் கம்பீர் கூறும்போது, “இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சு ஸ்பின் பந்துவீச்சு இரண்டும் உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார் வெளியில் உள்ளனர். எனவே 5 வேகப்பந்து வீச்சாளர் 2 ஸ்பின்னர்கள், கூடுதலாக குல்தீப் யாதவ் என்று 8 பவுலர்கள் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் நிலையில் உள்ளனர். இதனால்தன இந்த இந்திய அணி எதிரணியினரை கடந்த 2 ஆண்டுகளில் அதிகம் ஆல் அவுட் செய்ய முடிந்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT