Published : 14 Nov 2019 09:52 AM
Last Updated : 14 Nov 2019 09:52 AM
இந்தூரில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி டி20 தொடர், டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மோமினுள் ஹக், பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். அவர் கூறுகையில், " நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். ஆடுகளம் மிகவும் கடினமாக இருக்கிறது. 4-வது இன்னிங்ஸில் மாறும் என நினைக்கிறேன். முதல் முறையாக கேப்டன் பதவியேற்றது பெருமையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நதீமுக்குப் பதிலாக இந்திய அணியில் இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களும், அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகிய 2 சுழற்பந்துவீச்சாளர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேட்டிங்கில் விராட் கோலி, மயங்க் அகர்வால், சத்தேஸ்வர் புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, விருதிமான் சாஹா ஆகியோர் இருக்கின்றனர். ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை.
விராட் கோலி கூறுகையில், "நாங்கள் முதலில் பந்து வீசவே நினைத்தோம். அதுதான் பந்துவீச்சாளர்களுக்கு பொருத்தமாக இருக்கும். 2-வது நாளில் இருந்து பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், நதீமுக்கு பதிலாக இசாந்த் சேர்க்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
ஆடுகளம் எப்படி :
இந்தூர் ஆடுகளத்தில் லேசான அளவுக்குப் புற்களும், பிளவுகளும் இருப்பதால், முதல் நாளில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். 2-வது நாள் வரைகூட பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனலாம். ஆனால், 2-வது நாளில் பிற்பகுதிக்குப் பின் ஆடுகளத்தின் தன்மை மாறத் தொடங்கி பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவும் இருக்கும். இரவு நேரத்தில் பனிப்பொழிவின் தாக்கம் காலை நேரத்தில் ஆடுகளத்தில் இருக்கும். முதல் இருநாட்கள் பந்துவீச்சில் ஒத்துழைத்த அளவுக்கு அடுத்துவரும் நாட்களுக்கு இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT