Last Updated : 12 Nov, 2019 04:45 PM

 

Published : 12 Nov 2019 04:45 PM
Last Updated : 12 Nov 2019 04:45 PM

சீர்த்திருத்தங்களை நீர்த்துப் போகச் செய்து உச்ச நீதிமன்றத்தை கேலிக்குள்ளாக்குவதா? : கங்குலி தலைமை பிசிசிஐ-க்கு லோதா கமிட்டி கண்டிப்பு

புதுடெல்லி

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் செய்யப்பட்ட பிசிசிஐ நிர்வாகச் சீர்த்திருத்தங்களை கங்குலி தலைமை பிசிசிஐ நீர்த்துப் போகச் செய்தால் அது உச்ச நீதிமன்றத்தை கேலிக்குள்ளாக்கும் செயல் என்று ஓய்வு பெற்ற நீதிபதி லோதா கமிட்டி செயலர் கோபால் சங்கர நாராயணன் கண்டிதுள்ளார்.

உச்ச நீதிமன்றம் இன்னமும் கூட செயலாற்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை எனில் அதன் சீர்த்திருத்த முயற்சிகள் யாவும் விரயமே ஆகவே பிடியை விடக்கூடாது என்கிறார் சங்கர நாராயணன்.

“நிர்வாகச் சீர்த்திருத்தங்களை நீர்த்துப் போகச் செய்வதை அனுமதித்தால், அது கேள்விக்குட்படுத்தப்படாவிட்டால், உச்ச நீதிமன்றமும் தானே கவனமேற்கொண்டு செயல்படாவிட்டால், நிச்சயம் தற்போதைய பிசிசிஐ நிர்வாகத்தின் போக்குகள் உச்ச நீதிமன்றத்தைக் கேலிப்பொருளாக்கிவிடும்” என்று சங்கர நாராயணன் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐயின் புதிய செயலர் ஜெய் ஷா டிசம்பர் 1ம் தேதி மும்பையில் நடைபெறும் பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்திற்கான திட்ட நிரலை அளித்துள்ளார், அதில் நிர்வாகிகளின் பதவிக்காலம் பற்றிய புதிய விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படவுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்கிறார் சங்கர நாராயணன்.

“மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதலைத் தவிர இது வேறு ஒன்றுமில்லை. முக்கியமான சீர்த்திருத்தங்கள் காணாமல் போய்விடும்” என்கிறார் அவர்.

2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டியின் செயலராக நியமிக்கப்பட்டவர் சங்கர நாராயணன். இந்தக் கமிட்டியின் தலவிஅர் முன்னாள் தலைமை நீதிபதி லோதா ஆவார். இவரக்ளுடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், மற்றும் அசோக் பான் ஆகியோரும் குழுவில் இருந்தனர்.

“பிசிசிஐ சட்ட அமைப்பை மாற்றுவதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரமே தேவையில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்ட முயல்கின்றனர்.

திருத்தம் ஏகமனதாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் பங்கை ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் இதில் கோர்ட்டின் பங்குதான் இதுவரை இருந்து வந்துள்ளது. 2016-ல் முதற்கட்ட சீர்த்திருத்தங்கள் செய்த போதே உச்ச நீதிமன்ற அதிகாரம் பற்றி குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. அப்போது உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழுவான சிஓஏ வரைந்து சமர்ப்பித்த சட்டவிதிமுறைகளை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அங்கீகரித்துள்ளது.

ஆனால் இப்போதைய பிசிசிஐ நிர்வாகம் என்ன கூறுமெனில், ‘நாங்கள் விதிமுறைகளை மாற்றுவதை உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை, எனவே திருத்தம் செய்வதில் தவறில்லை, அனைத்து மாற்றங்களையும் செய்வோம்’ என்று கூறுவார்கள், இது மிகவும் குறுகலான பார்வை.

உச்ச நீதிமன்றமே தனது அசலான சீர்த்திருத்தங்களில் பலவற்றை மாற்றி விட்டபோதும் மீச்ச மீதமுள்ள சீர்த்திருத்தங்களையும் நீர்க்கச் செய்து மீண்டும் பழைய வழிமுறைகளே பெரிய வழியில் தொடர்வதை இவர்கள் உறுதி செய்வார்கள்.

எனவே உச்ச நீதிமன்றம் நிச்சயம் இதில் தலையிட வேண்டும்” என்று சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x