Published : 30 Oct 2019 12:10 PM
Last Updated : 30 Oct 2019 12:10 PM
துபாய்
வங்கதேச ஆல்ரவுண்டர் சகிப் அல்ஹசனுக்கும், சூதாட்டத் தரகருக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் உரையாடலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து சூதாட்டத் தரகருடன் சகிப் அல்ஹசன் தொடர்ந்து பேசி வருவதை ஐசிசி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சகிப் அல்ஹசனிடம், தீபக் அகர்வால் என்ற சூதாட்டத் தரகர் அணுகி மேட்ச் பிக்ஸிங் குறித்துப் பேசியுள்ளார். ஆனால், சகிப் அல்ஹசன் அதை ஏற்கவில்லை.
ஐசிசி விதிமுறைப்படி வீரர்களை எந்த சூதாட்டத் தரகர்கள் அணுகினாலும் உடனடியாக அதை சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம், அல்லது ஐசிசியிடம் புகார் அளிக்க வேண்டும்.
ஆனால், சகிப் அல்ஹசன் அவ்வாறு புகார் அளிக்கவில்லை. சர்வதேச அளவில் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சூதாட்டத் தரகரின் தொலைபேசி எண்களை ஆய்வு செய்தபோது, தீபக் அகர்வாலுடன் சகிப் அல்ஹசனிடம் பேசியுள்ளதை ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
ஆனால், இதுகுறித்து ஐசிசி அமைப்பின் ஊழல் தடுப்பு அமைப்பிடம் சகிப் புகார் தெரிவிக்காததால் ஐசிசி விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் 2 ஆண்டுகள் வரை அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாட சகிப் அல்ஹசனுக்கு ஐசிசி நேற்று தடை விதித்தது.
இந்த சூழலில் சகிப் அல்ஹசனுடன் சூதாட்டத் தரகர் தீபக் அகர்வால் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்தே தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்ற விஷயத்தை ஐசிசி வெளிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நவம்பர் 2017
கடந்த 2017-ம் ஆண்டு முதன்முதலாக சகிப் அல்ஹசனை சூதாட்டத் தரகர் தீபக் அகர்வால் அணுகியுள்ளார். அப்போது சகிப் அல்ஹசன் வங்கதேசத்தில் நடந்த பிபில் டி20 போட்டித் தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
சகிப் அல்ஹசனுக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் அவரின் செல்போன் எண் தீபக் அகர்வாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போதுதான் முதன்முதலாக சகிப்புடன் அகர்வால் பேசியுள்ளார்.
மேலும், அப்போது சகிப்புடன் பேசிய அகர்வால் மற்ற பிபிஎல் தொடரில் விளையாடும் மற்ற வீரர்களின் செல்போன் எண்ணையும் கேட்டுள்ளார். அதன்பின் இருவருக்கும் இடையே பலமுறை வாட்ஸ் அப் பரிமாற்றம் நடந்துள்ளது என ஐசிசி தெரிவித்துள்ளது
2018 ஜனவரி
வங்கதேசம், இலங்கை, ஜிம்பாப்வே முத்தரப்பு தொடரில் சகிப் அல்ஹசன் விளையாடியபோதும் அகர்வால் அவருடன் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டுள்ளார்.
2018, ஜனவரி 19-ம் தேதி நடந்த போட்டியில் சகிப் அல்ஹசன் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக அவரைப் பாராட்டி, அகர்வால் ஒரு வாட்ஸ் அப் செய்தியை அனுப்பியுல்ளார். அதைத் தொடர்ந்து, "இந்தத் தொடரில் நாம் சேர்ந்து பணியாற்றலாமா அல்லது ஐபிஎல் வரை காத்திருக்கவா" என்று அகர்வால் கேட்டுள்ளார்.
இதில் பணியாற்றலாமா என்ற வார்த்தை என்பது, அணிக்குள் இருக்கும் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
அதன்பின் ஜனவரி 23-ம் தேதியும் அகர்வாலிடம் இருந்து சகிப்புக்கு வாட்ஸ் அப் செய்தி வந்துள்ளது. அதில் " புரோ இந்தத் தொடரில் ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா" எனக் கேட்டுள்ளார். ஆனால், சகிப் அல்ஹசன் எந்தவிதமான தகவலையும் வெளியிட வில்லை
2018-ஏப்ரல்
இந்தியாவில் நடந்த ஐபிஎல் டி20 தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக சகிப் அல்ஹசன் விளையாடினார். அப்போதும் அகர்வாலிடம் இருந்து சகிப் அல்ஹசனுக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி வந்துள்ளது. பல்வேறு விஷயங்களைக் கேட்டுள்ளார். அதற்கு சகிப் அல்ஹசனும் பதில் அளித்துள்ளார்
மேலும் பிட்காயின்ஸ், டாலர், ரூபாய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தீபக் அகர்வாலிடம் சகிப் அல்ஹசன் பேசியுள்ளார். அதன்பின் சகிப் அல்ஹசனிடம் சந்திக்க வேண்டும் என்று தீபக் அகர்வால் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT