Published : 01 Jan 1970 05:30 AM
Last Updated : 01 Jan 1970 05:30 AM
ஒருநாள் கிரிக்கெட்டில் விரேந்திர சேவாக், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது பேட்டிங் கலவையாகத் தோன்றும் இங்கிலாந்து அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் டெஸ்ட் போட்டிக்கும் தொடக்க வீரராக களமிறங்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் சொதப்பினாலும் 2வது இன்னிங்சில் அதிரடி 72 ரன்களை எடுத்தார். அன்றைய லார்ட்ஸ் பிட்ச் பவுலிங்கிற்குச் சாதகமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டில் மிஞ்சிப் போனால் 2 ஸ்லிப் நிறுத்துவார்கள் மிகவும் அரிதாகவே 3 ஸ்லிப் நிறுத்தப்படும் அதுவும் மிஞ்சிப் போனால் 5 ஓவர்களுக்கு அந்த பீல்டிங் முறை இருக்கும், ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பவுலிங் சாதக சூழ்நிலைமைகளில் நாள் முழுதும் 3 ஸ்லிப் கல்லி சில வேளைகளில் 4 ஸ்லிப் என்று கூற நிற்க வைப்பார்கள்.
இந்நிலையில் துணைக்கண்ட மட்டைப்பிட்ச்களில் குட் லெந்த் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே செல்லும் பந்துகளை காலைப் போட்டு ட்ரைவ் ஆடலாம் பந்து கவருக்குச் செல்லும், ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க பிட்ச்களில் அந்தமாதிரி பந்துகளை ட்ரைவ் ஆடினால் பந்து பின்னால் ஸ்லிப், கல்லி திசைக்குக் கேட்சாகச் செல்லும், இது பெரிய வித்தியாசம். இங்கெல்லாம் பந்து வரும் வரை கடைசி வரைப் பார்த்து பின் காலில் சென்று ஆடுவதே உசிதம். ஜேசன் ராய் போன்றவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரும்பாலும் மட்டைப்பிட்ச்களில் ஆடிப்பழக்கப் பட்டவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சூழ்நிலை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் போது, அதுவும் ‘ஸ்லெட்ஜிங்’ புகழ் ஆஸி. அணிக்கு எதிராக நிச்சயம் ஜேசன் ராய்க்கு வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், ஜேசன் ராய் ஆஷஸ் தொடரில் வெற்றி பெறுவாரா என்பதை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்.
“ராய் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி ஆடுகிறார் என்று பார்ப்போம். ஒரு டெஸ்ட்தான் ஆடியுள்ளார், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் ஒருநாள் போட்டிக்கும் அதிக வித்தியாசம் உண்டு. இங்கிலாந்தில் ஒன்று கடினம் என்றால் அது தொடக்க வீரராக வெற்றி பெறுவது அதனால்தான் அலிஸ்டர் குக் சாதனைகளுக்கு ஆயுள் அதிகம். இங்கிலாந்தில் தொடக்கத்தில் இறங்கி அடித்து ஆடுவது என்பது கடினம்.
ஏரோன் பிஞ்ச் இந்தியாவின் தரமான பவுலிங்குக்கு எதிராக திணறினார். இத்தனைக்கும் பிட்சில் பெரிய உதவி எதுவும் பவுலர்களுக்கு இல்லை. இருந்தாலும் பிஞ்ச் திணறினார். அதே போல் ஜேசன் ராய் தன் ஆட்டத்தை மேம்படுத்தினால் தப்பலாம், ஏனெனில் இங்கு பந்துகள் எழும்பி, ஸ்விங் ஆகும். உள்நாட்டு கிரிக்கெட்டில் 5ம் நிலையிலோ, 6ம் நிலையிலோ இறங்குகிறார் ஏரோன் பிஞ்ச். சரே அணியில் ராயும் இந்த டவுனில்தான் இறங்குகிறார் என்று நினைக்கிறேன். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒருபடி குறைந்த கவுண்ட்டியில் பின்னால் இறங்கி விட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென தொடக்கத்தில் இறங்கி ஆடுவது கடினம். இருப்பினும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார் ஜோஷ் ஹேசில்வுட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT