Published : 03 May 2014 03:16 PM
Last Updated : 03 May 2014 03:16 PM

சென்னை லீக் கால்பந்து: சாய் அணிக்கு 5-வது தோல்வி

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் சென்னை சுங்கத்துறை அணி 3-1 என்ற கோல் கணக்கில் சாய் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது சாய் அணி.

சென்னை நேரு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை சாய் வீரர் விஜயபிரபாகரன் கோட்டை விட்டார். இதன்பிறகு இரு கோல் வாய்ப்புகளை கோட்டைவிட்ட சுங்கத்துறை அணி, 33-வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தது.

அந்த அணியின் ஸ்டிரைக்கர் ரமேஷ் தனது தலையால் பந்தை முட்ட, கோல் கீப்பர் திவாகர் முறிய டித்தார். ஆனால் அவர் கையில் இருந்து நழுவிய பந்து மிட்பீல்டர் சதீஷின் வசம் செல்லவே, முன்னேறிச் சென்ற திவாகர் கீழே விழுந்தார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சதீஷ் மின்னல் வேகத்தில் கோலடித்தார்.

இதனால் உற்சாகம் பெற்ற சுங்கத்துறை அணி அடுத்த 2-வது நிமிடத்தில் (35-வது நிமிடம்) அடுத்த கோலை அடித்தது. சதீஷ் குமார் கொடுத்த கிராஸில் ரமேஷ் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சுங்கத் துறை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றி ருந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சாய் அணி, 2-வது நிமிடத்திலேயே (அதாவது 47-வது நிமிடம்) கோலடித்தது. அந்த அணியின் மாற்று ஆட்டக்காரரான செந்தில் கொடுத்த கிராஸில் ராஜீவன் கோலடித்தார். இதன்பிறகு சுங்கத்துறை மிட்பீல்டர் பாரதிராஜா அடுத்தடுத்து இரு கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அந்த அணியால் கோலடிக்க முடியவில்லை.

இரு அணிகளும் அவ்வப்போது வீரர்களையும் அவர்களின் நிலைகளையும் (பொசிஷன்கள்) மாற்றிப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து கோலடிக்கும் கடைசி முயற்சியாக சாய் அணி தனது கோல் கீப்பர் திவாகரை ஸ்டிரைக்கராக மாற்றியது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 88-வது நிமிடத்தில் சாய் வீரர் சந்தீப் குமார், சுங்கத்துறை வீரர் ராமுவை கீழே தள்ள, சுங்கத்துறைக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாகப் பயன்படுத்திய ஜேம்ஸ் செல்வக்குமார் கோலடித்தார்.

கடைசி நேரத்தில் மாற்று ஆட்டக் காரராக களமிறங்கிய குமார், ராமுவுக்கு பந்தை ‘பாஸ்’ செய்ய, அதை கோல் கம்பம் வரை எடுத்துச் சென்ற ராமு எளிதாக கோலடிக்க வேண்டிய நிலையில் கோல் கம்பத்துக்கு மேல் பந்தைத் தூக்கியடிக்க, சுங்கத்துறையின் மற்றொரு கோல் வாய்ப்பு ஏமாற்றத் தில் முடிந்தது. இறுதியில் சுங்கத் துறை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. சுங்கத்துறை வீரர் ரமேஷ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சுங்கத்துறை அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்விகளுடன் 7 புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

முதல் டிவிசன் லீக் போட்டி யில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணி 7-2 என்ற கோல் கணக்கில் எஸ்.சி.ஸ்டெட்ஸ் அணியைத் தோற்கடித்தது.

இரு நாள்கள் விடுமுறை

சனி, ஞாயிறு ஆகிய இரு நாள் களும் சென்னை லீக் போட்டி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x