மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி கண்டது. கடைசி ஓவர் வரை நீண்ட இந்த போட்டியில், வழக்கம் போல கேப்டன் தோனி வெற்றிக்கான ரன்களை உறுதி செய்து வெற்றி தேடித் தந்தார்.
சென்னை அணியின் துவக்க வீரர்கள் ஸ்மித் மற்றும் மெக்கல்லம், மும்பையின் பந்துவீச்சை சமாளித்து ஆட முயற்சி செய்தனர். மெக்கல்லம் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரெய்னா 19 பந்துகளில் ஸ்டம்பிங் ஆனார். அம்பையரின் இந்த முடிவு சந்தேகத்திற்குரியதானது.
அடுத்து களமிறங்கிய ப்ளெஸ்ஸிஸ் ஸ்மித்துடன் இணைந்து ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். இருவரும் இணைந்து 46 பந்துகளில் 63 ரன்களைக் குவித்து வெற்றிக்கான தளத்தை அமைத்துக் கொடுத்தனர். 49 பந்துகளில் ஸ்மித் அரை சதம் கடந்தார். ப்ரவீண் குமார் வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த ஸ்மித் அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு முயற்சித்து கேட்ச் கொடுத்தார்.
அடுத்த ஓவரில் ப்ளெஸ்ஸிஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெற்றிக்கான வாய்ப்பு சரிசமமானது. 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், மலிங்கா வீசிய 19-வது ஓவரில் ஜடேஜாவும், மன்ஹாஸும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேப்டன் தோனி பொல்லார்டின் பந்துவீச்சை எதிர் கொண்டார்.
முதல் பந்து வைட் ஆக, அடுத்த பந்தில் 2 ரன்களை தோனி எடுத்தார். 2-வது பந்து அதிரடியாக சிக்ஸருக்குப் பறக்க, 3-வது பந்து பவுண்டரிக்குச் சென்றது. முடிவில் 3 பந்துகள் மிச்சமிருக்கையில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி மும்பையை வீழ்த்தியது.
முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தார். துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் கவுதம் இருவரும் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த கவுதம், அதே ஓவரிலேயே பத்ரியின் பந்தில் வீழ்ந்தார்.
அடுத்து களமிறங்கிய ராயுடு, சிம்மன்ஸுடன் இணைந்து அதிரடியைத் தொடர்ந்தார். 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்திருந்தபோது அஸ்வினின் பந்தில் சிம்மன்ஸ் ஆட்டமிழந்தார்.
38 பந்துகளில் ராயுடு அரை சதத்தை அடைய, ரோஹித் சர்மா 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அம்பாதி ராயுடு 59 ரன்களுக்கு (43 பந்துகள், 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.
களத்தில் இருந்த தாரே, ஆண்டர்சன் இணை கடைசி இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் சேர்த்தது. 20-வது ஓவரின் கடைசி பந்தில் தாரே ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது.
WRITE A COMMENT