Published : 25 May 2014 11:44 PM Last Updated : 25 May 2014 11:44 PM
சிலிர்ப்பூட்டும் வெற்றியுடன் முன்னேறியது மும்பை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்று ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 14.3 ஓவர்களில் 190 என்ற இமாலய இலக்கை விரட்டினால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் மும்பை அணி சரியாக ஆடி, தேவையான ஓவர்களில் இலக்கை எட்டியது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வி அடைந்திருந்தாலும் 14.3 ஓவர்களில் மும்பை அணியை வெற்றி பெற விடாமல் செய்தால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கலாம். ஆனால் 15-வது ஓவரின் தொடக்கத்தில், 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் கோரே ஆண்டர்சன் 1 ரன் எடுத்தார். அடுத்த பந்தை ராயுடு சிக்ஸருக்கு விளாசினார். 1 பந்தில் 2 ரன்கள் தேவை எனும் போது, துரதிர்ஷ்டவசமாக ராயுடு 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார்.
ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற 1 ரன் மட்டுமே குறைவாக இருந்ததால் தொடர்ந்து நடுவர்களும், வீரர்களும் ஆலோசித்ததில் அடுத்த பந்தில் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்தால் மும்பை தகுதி பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. அப்போது களமிறங்கிய ஆதித்ய தாரேவுக்கு அந்த செய்தி சொல்லப்பட்டது. ஃபால்க்னர் வீசிய 4-வது பந்து லெக் ஸ்டெம்பில் ஃபுல் டாஸாக வந்து விழ, அதை தாரே, ஸ்கொயர் லெக் பவுண்டரியின் பக்கம் விளாசினார். பந்து பவுண்டரி எல்லையைத் தாண்டி சிக்ஸருக்குப் பறக்க, மும்பை வெற்றி பெற்றதோடு, ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதியும் பெற்றது. வான்கடே மைதானத்தில் மும்பை ரசிகர்களின் கூச்சல் விண்ணைப் பிளந்தது.
முன்னதாக 190 ரன்கள் இலக்கை விரட்டக் களமிறங்கிய சிம்மன்ஸ் மற்றும் ஹஸ்ஸி இணை துவக்கம் முதலே அதிரடியாக ஆட முயற்சித்தது. சென்ற போட்டியில் சதம் அடித்த சிம்மன்ஸ் 12 ரன்களுக்கு 2-வது ஓவரில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கோரே ஆண்டர்சன், இதுவரை இந்தத் தொடரில் தான் வெளிப்படுத்தாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹஸ்ஸி 22 ரன்களுக்கும், பொல்லார்ட் 7 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் ஆண்டர்சன் சிறிதும் கலங்காமல் தனது அசத்தலைத் தொடர்ந்தார்.
தகுதி பெற 32 பந்துகளில் 82 ரன்கள் தேவை எனும்போது ரோஹித் சர்மா 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அந்த ஓவரிலேயே ஒரு சிக்ஸர் அடித்து 26 பந்துகளில் அரை சதம் கடந்தார் ஆண்டர்சன். களமிறங்கிய ராயுடுவும் ஆண்டர்சனுக்கு இணையாக தோள் கொடுத்து வெற்றி இலக்கை சீக்கிரமாக எட்டும் முயற்சியில் இறங்கினார். தொடர்ந்து பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் எல்லோருமே சொதப்ப ஒவ்வொரு ஓவரிலும் 20 ரன்கள் வரை மும்பை எடுக்க ஆரம்பித்தது. இறுதியில் 14.4 ஓவர்களிலே வெற்றி இலக்கைத் தொட்டு அபாரமாக வென்றது. ஆண்டர்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 95 ரன்களை எடுத்திருந்தார். இதில் 9 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடக்கம். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராயுடு கடைசி கட்டத்தில் ஆட்டமிழந்தாலும் 10 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 30 முக்கிய ரன்களை எடுத்தார்.
ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, வெற்றி அல்லது கௌரவமான தோல்வி என்ற விதியோடு களமிறங்கிய ராஜஸ்தான் அணி டாஸில் தோற்று பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டது. நேரம் புரிந்து, அந்த அணியின் வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை காண்பித்தனர். துவக்க வீரர் வாட்சன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் தொடர்ந்து வந்தவர்கள் அதிரடியாக ஆடி அணியை சிறப்பான ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ராஜஸ்தான் 189 ரன்களைக் குவித்தது. சாம்சன் 47 பந்துகலில் 74 ரன்களும், நாயர் 27 பந்துகளில் 50 ரன்களும், ஹாட்ஜ் மற்றும் ஃபால்க்னர், முறையே 29 மற்றும் 23 ரன்களை எடுத்தனர்.
WRITE A COMMENT