Published : 21 May 2014 03:08 PM
Last Updated : 21 May 2014 03:08 PM
ஐசிசி தனது ஊழல் ஒழிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், இந்த ஊழல் ஒழிப்புப் பிரிவின் முதன்மை அதிகாரி ஒருவருக்கு சூதாட்டத் தரகருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த மார்ச் - ஏப்ரலில் டாக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது இந்த ஐசிசி அதிகாரி இந்திய சூதாட்டத் தரகருடன் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஏஜென்சி செய்திகள் கூறியுள்ளன.
டாக்காவில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்று முதன்மை ஐசிசி அதிகாரி தரம்வீர் சிங் யாதவ் மற்றும் இந்திய சூதாட்டத் தரகர் என்று கருதப்படும் அடானு தத்தா ஆகியோரிடையே நடந்ததாகக் கருதப்படும் ஆடியோ உரையாடலை வரிக்கு வரி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூதாட்டத் தரகர் டாக்காவில் அப்போது கைது செய்யப்பட்டதாகவும் ஆனால் இந்த ஐசிசி அதிகாரி அவரை தனது இன்பார்மர் என்று கூறி உடனடியாக விடுவிக்குமாறு கூறியதாகவும் அதே சானல் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தி ஏஜென்சி ஐசிசி அதிகாரி யாதவை தொடர்பு கொண்டபோது தான் எதுவும் கூறுவதற்கில்லை என்றும் ஐசிசி-யிடம் இது குறித்து கேட்டுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
ஐசிசி ஊழல் ஒழிப்புக் குழுவில் உள்ள அதிகாரிக்கும், அடானு தத்தா என்ற சூதாட்டத் தரகருக்கும் இடையே நடந்ததாக வெளியிடப்பட்ட ஆடியோ உரையாடல் பதிவு இதோ:
ஐசிசி அதிகாரி யாதவ்: இந்த முறை நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறேன், நீங்கள் இங்கு இல்லை என்று நான் ஏற்கனவே அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.
சூதாட்டத் தரகர் அடானு தத்தா: நீங்கள் எனக்கு முன்னமேயே கூறியிருந்தால் நான் இந்நேரம் கிளம்பியிருப்பேன்.
யாதவ்: இல்லை. நான் ஏற்கனவே கூறிவிட்டேன், இங்கு நீங்கள் தங்கியிருப்பது பாதுகாப்பானது அல்ல.
தத்தா: இன்று எதுவும் நடந்து விடவில்லை. அந்த நபர் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். நான் அவரை ஏற்கனவே அடையாளம் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு நான் சந்தேகம் வருமாறு எதுவும் செய்யவில்லை.
யாதவ்: நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்கள்?
தத்தா: நான் இன்னும் அங்கேயேதான் இருக்கிறேன்.
யாதவ்: உங்களைக் காப்பாற்ற ஒரேயொரு வழிதான் உள்ளது. கூட்டத்தோடு கூட்டமாக இருந்து விடுங்கள், உங்களை அவர்கள் கவனிக்க மாட்டார்கள். உங்களை இன்னும் அவர்கள் பிடிக்கவில்லை?
அடானு தத்தா: இல்லை... இல்லை.
யாதவ்: அது போன்று எதுவும் நடந்து விடவில்லை அப்படித்தானே?
தத்தா: நான் இங்குதான் இருக்கிறேன், இப்போது நான் வெளியே போகிறேன்.
யாதவ்: உடனே கிளம்புங்கள், மூலையில் அமரவேண்டாம். மூலையில் அமர்ந்தால் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். மேலே கூட்டத்தோடு கூட்டமாக அமருங்கள்...
உங்களை அடையாளம் கண்டு கொண்டு விட்டால் பெரிய பிரச்சனைதான்.
தத்தா: ஆமாம்; இங்கு பிரச்சனை இருப்பதால் நான் உடனடியாக இந்தியா செல்கிறேன், நான் பேருந்தில் செல்கிறேன்.
யாதவ்: ஆம்! அதுதான் சரி! இப்போது உங்களை அடையாளம் கண்டு கொண்டு விட்டால் பெரும் பிரச்சனைதான்
தத்தா: நான் இப்போதே கிளம்பி விடுகிறேன். இன்று எதுவும் நடைபெறவில்லை. நான் பாதுகாப்பாக சென்று விடுகிறேன்...
இவ்வாறு அந்த ஆடியோ உரையாடலில் கூறப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி சானல் செய்தி வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT