Published : 21 May 2014 11:51 AM
Last Updated : 21 May 2014 11:51 AM

உபேர் கோப்பை பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா தலைமையிலான இந்திய அணி

டெல்லியில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு சாய்னா நெவால் தலைமையிலான இந்திய அணி முன்னேறியுள்ளது. 2010-ம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி இப்போதுதான் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதே நேரத்தில் காஷ்யப் தலைமையிலான இந்திய ஆடவர் அணி தாமஸ் கோப்பை போட்டியின் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவவிட்டது.

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இதில் தாமஸ் கோப்பை போட்டிஆடவர் களுக்கானது, உபேர் கோப்பை போட்டி மகளிருக்கானது. இந்த ஆண்டு டெல்லியில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இரு பிரிவிலும் தலா 16 அணிகள் பங்கேற்றுள்ளன. 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இந்திய மகளிர் அணி ஹாங்காங்கை 4-1 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. அதே நேரத்தில் இந்திய ஆடவர் அணி தென்கொரியாவிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-9, 21-10 என்ற கணக்கில் ஹாங்காங்கின் புய் யின் யிப்பை வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா அஸ்வின் பொன்னப்பா ஜோடியும் வெற்றி பெற்று இந்திய அணிக்கு 2-0 என்ற முன்னிலையைப் பெற்றுத்தந்தது. மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் பி.வி.சிந்து வென்றார். இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

அதே நேரத்தில் இந்தியாவின் பிரதன்யா, என்.சிகி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனை துளசி வென்றார். இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று காலிறுதிக்கு முன்னேறி யது. காலிறுதியில் தாய்லாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது. அதே நேரத்தில் ஆடவர் பிரிவில் இந்திய அணியை தென்கொரியா 3-2 என்ற கணக்கில் வென்றது. இதனால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x