Published : 18 May 2014 05:37 PM
Last Updated : 18 May 2014 05:37 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், புள்ளிப் பட்டியலில் பெங்களூரு 5-வது இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் 139 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வென்றது.
துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பர்தீவ் பட்டேல் 10 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கெயில் - கோலி இணை மிகவும் நிதானமாக பேட் செய்தது.
விராட் கோலி 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ரவீந்தர ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார். அதன்பின்னர், கெயில் - டிவில்லியர்ஸ் ஜோடி அதிரடியாக ஆடத் தொடங்கியது.
முதல் மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி, மூன்று ரன்களை மட்டுமே வழங்கியிருந்த அஸ்வின், தனது 4-வது மற்றும் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை வழங்கினார். அவரது கடைசி பந்தில் கெயில் ஆட்டமிழந்தார். கெயில் 50 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.
பின்னர், டி வில்லியர்ஸின் அதிரடியால், ஆட்டத்தின் போக்கு பெங்களூருக்கு சாதகமானது. எனினும், அவர் 18-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்ததால் மீண்டும் விறுவிறுப்பானது. டி வில்லியர்ஸ் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா வீசிய 19-வது ஓவரில் பெங்களூரு அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்பதால் பரபரப்பு கூடியது.
ஆட்டத்தின் கடைசி ஓவரை டேவிட் ஹஸ்ஸி வீசினார். அவர் வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்கு விரட்டினார் யுவராஜ் சிங். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். யுவராஜ் மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுக்க, 4-வது பந்தில் சச்சின் ராணா ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.
கடைசி இரண்டு பந்துகளில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், களமிறங்கிய நெச்சிம் பவுண்டரி விளாசி வெற்றியை உறுதி செய்தார். யுவராஜ் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 13 ரன்கள் எடுத்திருந்தார்.
சென்னை தரப்பில் அஸ்வின், ஹஸ்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முன்னதாக, ரெய்னாவின் அரைசதத்தின் துணையுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 139 ரன்களை இலக்காக நிர்ணயித்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ராஞ்சியில் நடைபெற்ற ஐபில் சீசன் 7-ன் 42வது போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித் 9 ரன்களிலும், மெக்கலம் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் ஆரோன் ஆட்டமிழக்கச் செய்தார்.
அதன்பின், ரெய்னா - ஹஸ்ஸி இணை மிகச் சிறப்பாக பேட் செய்து, அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக கூட்டியது.
எனினும், 14.3 ஓவரில் முரளிதரனின் பந்துவீச்சில் ஹஸ்ஸி 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர், ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி 7 ரன்களில் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் எடுத்தார்.
சுரேஷ் ரெய்னா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு தரப்பில் ஆரோன் 2 விக்கெட்டுகளையும், முரளிதரன் மற்றும் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT