Published : 26 May 2014 11:42 AM
Last Updated : 26 May 2014 11:42 AM

10-வது முறையாக ரியல் மாட்ரிட் சாம்பியன்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக்கில் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது ரியல் மாட்ரிட்.

போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளும் அபாரமாக ஆட, 36-வது நிமிடத்தில் அட்லெடிகோ அணியின் டீகோ காடின்ஸ் தலையால் முட்டி அற்புதமாக கோலடித்தார். இதன்பிறகு முதல் பாதி ஆட்டம் மட்டுமின்றி, ‘இஞ்சுரி’ நேரத்திற்கு முன்பு வரை கோல் எதுவும் விழாததால் அட்லெடிகோ அணியே முன்னிலையில் இருந்தது.

‘இஞ்சுரி’ நேரத்தின் 3-வது நிமிடத்தில் (90+3) ரியல் மாட்ரிட் அணியின் செர்ஜிகோ ரேேமாஸ் கோலடிக்க, ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதில் ரியல் மாட்ரிட் அபாரமாக ஆடியது. 110-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் கேரத் பேலும், 118-வது நிமிடத்தில் மாட்ரிட்டின் மார்செலோவும், 120-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரெனால்டோவும் கோலடிக்க, ரியல் மாட்ரிட் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதனால் சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக பட்டம் வெல்லும் அட்லெடிகோவின் கனவு தகர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x