Published : 25 Apr 2014 01:03 PM
Last Updated : 25 Apr 2014 01:03 PM

சாம்பியன்ஸ் லீக்: பென்ஸீமா கோலில் மாட்ரிட் வெற்றி

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச்சை தோற்கடித்தது. இதன்மூலம் கடந்த 12 ஆண்டுகளில் முதல்முறை யாக இறுதிச்சுற்று வாய்ப்பை நெருங்கியுள்ளது மாட்ரிட்.

வரும் செவ்வாய்க்கிழமை ஜெர்மனியில் நடைபெறவுள்ள 2-வது சுற்றில் மாட்ரிட் அணி டிரா செய்தாலே இறுதிச்சுற்றை உறுதி செய்துவிடும். ஆனால் பேயர்ன் மூனிச் அணி முதல் ஆட்டத்தில் கோல் அடிக்காததால், அடுத்த ஆட்டத்தில் குறைந்தபட்சம் 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலொழிய இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாது. அதாவது 2-0 அல்லது 3-1 என்ற கோல் கணக்கில் வென்றால் மட்டுமே பேயர்ன் அணிக்கு இறுதிச்சுற்று சாத்தியமாகும்.

இந்த அரையிறுதிப் போட்டி இரண்டு சுற்றுகளைக் கொண்ட தாகும். அதன்படி முதல் சுற்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாட்ரிட் அணியைப் பொறுத்த வரையில் ஒரே மாற்றம் மட்டும் செய்யப்பட்டிருந்தது. தசைநார் முறிவு காரணமாக 4 போட்டிகளில் விளையாடாத ஸ்டிரைக்கர் ரொனால்டோ அணிக்கு திரும்பினார். அதேநேரத்தில் புளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்றொரு ஸ்டிரைக்கர் கரீத் பேல் விளையாடவில்லை.

ஆரம்பத்தில் பேயர்ன் அணி சிறப்பாக ஆடியபோதும், 19-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் கோலடித்தது. எதிர்முனையில் இருந்து பந்தை எடுத்து வந்த ரொனால்டோ, இடதுபுறத்தில் இருந்த சென்ட்ராவுக்கு பந்தை “பாஸ்” செய்தார். அதை சரியாகப் பயன்படுத்திய சென்ட்ரா, பந்தை மிகத்தாழ்வாக கோல் கம்பத்தை நோக்கி “கிராஸ்” செய்தார். அதில் அந்த அணியின் கரீம் பென்ஸீமா துல்லியமாகக் கோலடிக்க, ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு ரியல் மாட்ரிட் அணிக்கு மற்றொரு கோல் வாய்ப்பு கிடைக்க, அதை ரொனால்டோ கோட்டைவிட்டார். பென்ஸீமா “கிராஸ்” செய்த அந்த பந்தை ரொனால்டோ வெளியில் தூக்கியடித்தார். இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறும் வாய்ப்பை இழந்தது மாட்ரிட். இதன்பிறகு அதிக நேரம் பந்தை வைத்திருந்த பேயர்ன் அணிக்கு ஒரு சில கோல் வாய்ப் புகள் கிடைத்தாலும் அதை அந்த அணியின் வீரர்கள் வீணடித்தனர்.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் ரொனால்டோவின் கோல் வாய்ப்பை பேயர்ன் கோல் கீப்பர் மானுவேல் நீவர் முறியடிக்க, கடைசி 20 நிமிடங் களில் இரு அணிகளுமே ஏராளமான வீரர்களை மாற்றிப் பார்த்தும் பலனில்லை. கடைசிக் கட்டத்தில் பேயர்ன் அணியின் ஒரு சில வாய்ப்புகளை இகர் கேசில்லஸ் தகர்க்க, மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x