Published : 10 Apr 2014 10:49 AM
Last Updated : 10 Apr 2014 10:49 AM

கணவருடன் கருத்து வேறுபாடு இல்லை: சானியா மிர்சா விளக்கம்

தனது கணவர் சோயிப் மாலிக்குடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா விளக்க மளித்துள்ளார்.

முன்னதாக சோயிப் மாலிக் – சானியா மிர்சா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் பிரிந்துவிடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாயின. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை 2010-ம் ஆண்டு சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது. பாகிஸ்தானில் தனது கணவரின் ஊரான சியால் கோட்டில் நேற்று சானியா மிர்சா செய்தியாளர்களிடம் கூறியது:

எனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று வெளியான செய்தி தவறானது. எங்கள் திருமணம் மிகவும் சாதாரணமான நிகழ்வு அல்ல. இருவருமே சர்வதேச விளையாட்டு வீரர்கள். இருவேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இருவருக்குமே நெருக்கடிகளும் அதிகம். எனினும் அவற்றை சமாளித்து வருகிறோம். இப்போது எனது கணவருடனும், அவரது உறவினர்களுடனும் சிறிது நாள்கள் தங்குவதற்காகவே சியால்கோட் வந்துள்ளேன். ஊடகங்களின் அதிக தொந்தரவு இல்லாமல், இங்குதான் நான் சற்று சுதந்திரமாக இருக்க முடிகிறது.

நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடிவதில்லை என்பது உண்மைதான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டபோது எந்த அளவுக்கு அன்புடன் இருந்தோமோ அதே அளவு அன்புடன்தான் இப்போதும் இருக்கிறோம். விளையாட்டையும், திருமண வாழ்க்கையையும் ஒரே நேரத்தில் கையாளுவது என்பது கடினமானது தான். ஆனால் அதனை சமாளிக்கும் திறன் இருவருக்குமே உண்டு. பாகிஸ்தானில் பாதுகாப்பு குறை பாடுகள் இருக்கும் என்று அனை வரும் கூறுகிறார்கள். ஆனால் இங்கு நான் வரும்போது எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள வில்லை. இது எனது கணவர் வீடு என்றார்.

சமீபத்தில் இருபது ஓவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை எனது கணவரின் குடும்பத்துடன் டி.வி.யில் பார்த்தேன். நாங்கள் அனை வரும் இந்தியாதான் வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் அப்படி நடக்கவில்லை.அனைத்து கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டு வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சோயிப் மாலிக் மீண்டும் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x