சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் ஆடிய சென்னை அணி 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தனது ஆட்டத்தை தொடங்கிய டெல்லி அணி 2-வது ஓவரில் துவக்க வீரர் பாண்டேவை 2 ரன்களுக்கு இழந்தது. தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் விஜய்யும் அடுத்த ஓவரில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாண்டே திவாரியை வெளியேற்ற, டெல்லி அணி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டுமினியும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்மித்தின் பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆட்டம் மொத்தமாக சென்னை அணிக்குச் சாதகமாகத் திரும்பியது. நட்சத்திர வீரர் கார்த்திக்கும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
டெல்லி அணியின் வீரர் கோல்டர் நீல் பேட்டிங் செய்ய இயலாலததால் 84 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் டெல்லி அணியின் ஆட்டம் நிறைவடைந்தது. இதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் பந்துவீசிய அனைத்து வீரர்களும் விக்கெட் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணிக்கு அதிகபட்சமாக நீஷம் 22 ரன்கள் குவித்திருந்தார்.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த சென்னை அணிக்கு ஸ்மித் மற்றும் மெக்கல்லம் அதிரடி துவக்கத்தைத் தர முற்பட்டனர். ஆனால் மெக்கல்லம் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உனத்காட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரெய்னா, ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆட ஆரம்பித்தார். டெல்லி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் பவுண்டரிகள் கட்டுப்படுத்தப்பட்டன. 28 பந்துகளில் 29 ரன்கள் அடித்த ஸ்மித் நதீம் பந்தில் வீழ்ந்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரெய்னா, 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். 56 ரன்களுக்கு அவர் ஆட்டமிழக்க, ப்ளெஸ்ஸி , தோனியுடன் இணைந்தார். இந்த இணையால் சென்னை 150 ரன்களைக் கடந்தது. ப்ளெஸ்ஸி 17 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கும், தோனி 15 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்தது. அதிகபட்சமாக ரெய்னா 56 ரன்கள் எடுத்தார்.
WRITE A COMMENT