Published : 29 Apr 2014 09:39 PM Last Updated : 29 Apr 2014 09:39 PM
சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் வெற்றி: கடைசி கட்டத்தில் தவறிய கொல்கத்தா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இரு அணிகளின் 20 ஓவர்கள் ஸ்கோர் சமனில் முடிய, சூப்பர் ஓவர் ஸ்கோரும் சமனில் முடிந்தது. கொல்கத்தா அணியை விட ராஜஸ்தான் அணி அதிக பவுண்டரிகள் அடித்திருந்ததால், விதிகளின் படி ராஜஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வெற்றிக்கு 151 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, துவக்க வீரர்களாக பிஸ்லா மற்றும் காம்பீர் களமிறங்கினர். சென்ற போட்டிகளில் மோசமாக ஆடிய காம்பீர், இன்று கவனமாக ஆடினார். 3-வது ஓவரில் பிஸ்லா வீழ, காலிஸ் களமிறங்கினார்.
இந்த ஜோடியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. காலிஸ் 13 ரன்களுக்கு டாம்பேவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த பாண்டே, 19 ரன்களில் வீழ்ந்தார். அடுத்த ஓவரிலேயே காம்பீரும் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க கொல்கத்தா அணியின் வெற்றிவாய்ப்பு மெலிந்தது.
இந்த கட்டத்தில் ஜோடி சேர்ந்து ஆடிய யாதவ் மற்றூம் ஷகிப் அல் ஹசன் இருவரும் சூழலுக்கு ஏற்ப தங்களது ஆட்டத்தின் தன்மையை மாற்றினர். குறிப்பாக 17 மற்றும் 18-வது ஓவர்களில், இந்த இணை 26 ரன்களைச் சேர்த்தது. 19-வது ஓவரை வீச வந்த ஃபால்க்னர் யாதவ்வை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதே ஓவரில் மேலும் உத்தப்பா மற்றும் வினய் குமார் விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிச்சர்ட்சனின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஷகிப். அடுத்த பந்தில் 2-வது ரன் எடுக்க முற்படும்போது பியூஷ் சாவ்லா ரன் அவுட் ஆனார். அடுத்த 4 பந்துகளில், ஒரு வைட் உட்பட 6 ரன்கள் மட்டுமே வர, ஆட்டம் சமன் ஆகி, சூப்பர் ஓவருக்குச் சென்றது. அணியை வெற்றியின் விளிம்பிற்கு எடுத்துச் சென்ற ஷகிப் அஉல் ஹசன் 18 பந்துகளில் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய கொல்கத்தா, முதல் பந்திலேயே யாதவ்வை இழந்தது. 4-வது பந்தில் பாண்டே அதிரடியாக ஒரு சிக்ஸர் அடிக்க கடைசிப் பந்தில் ஷகிப் அல் ஹசன் ரன் அவுட் ஆனார். ஒரு ஓவரில் கொல்கத்தா 11 ரன்களை எடுத்தது.
ஒரு ஓவரில் 12 ரன்கள் தேவை என்று ஆட வந்த ராஜஸ்தான் அணிக்கு சவாலாக, கொல்கத்தாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் பந்துவீச வந்தார். முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே வர, 4-வது பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட ஸ்மித் 2 ரன்கள் மட்டுமே அடித்ததால் மீண்டும் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆனால், விதிகளின் படி, ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை விட அதிக பவுண்டரிகள் அடித்திருந்தால், அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் வாட்சன், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். துவக்க வீரர் ரஹானே தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்க்க ஆரம்பித்தார். மறுமுனையில் இருந்த நாயர் வினய் குமார் வீசிய பந்தை அடித்து ஆட முயற்சி செய்து 1 ரன்னுக்கு வீழ்ந்தார். தொடர்ந்து வந்த சாம்சன் அதிரடி ஆட்டத்துடன் கொல்கத்தாவின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
முன்னணிப் பந்துவீச்சாளர் மார்னே மார்கல் வீசிய 6-வது ஓவரில் சாம்சன் 4 பவுண்டரிகளை அடித்தார். ஆனால் அவரது அதிரடி ஷகிப் உல் ஹசன் வீசிய 9-வது ஓவரில் முடிவுக்கு வந்தது. அடுத்து ஜோடி சேர்ந்த வாட்சன், ரஹானே ஜோடி அணியை சிறப்பான ஸ்கோரை நோக்கி வழிநடத்தியது.
ரஹானே 44 பந்துகளில் அரை சதம் எடுத்தார். சிறப்பாக ஆடிவந்த வாட்சன் துரதிர்ஷடவசமாக 33 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த பின்னி முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, ஸ்மித், ரஹானேவுடன் இணைந்தார். ரஹானே கடைசி ஓவரில் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது.
WRITE A COMMENT