Published : 21 Mar 2014 10:26 AM
Last Updated : 21 Mar 2014 10:26 AM
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-10 சுற்று இன்று தொடங்குகிறது. வங்கதேசத்தின் மிர்பூரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பரமவைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
இந்த ஆண்டில் இதுவரை தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ள இந்திய அணி, டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அணி கருதப்பட்டாலும் உலகக் கோப்பை போட்டிகளில் அந்த அணி இதுவரை இந்தியாவை வீழ்த்தியதில்லை. டி20 உலகக் கோப்பையில் இதற்கு முன்னர் மோதிய 3 ஆட்டங்களிலும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியது. அதன்பிறகு இப்போதுதான் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவைவிட அதிகமான போட்டிகளில் விளையாடியிருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.
இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்றாலும், 2-வது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது. அதனால் பாகிஸ்தானுடனான இந்த ஆட்டத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் பிரச்சினைகள் உள்ளன. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இருவரும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். ஆனாலும் கேப்டன் தோனி பெரிய அளவில் மாற்றம் செய்யமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மாற்றம் செய்யும்பட்சத்தில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக அஜிங்க்ய ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம்.
இந்தியா வலுவான ஸ்கோரை குவிப்பதற்கு தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பாக ஆடுவது முக்கியம். விராட் கோலி தொடர்ந்து அசத்தலாக ஆடி வருவது மட்டுமே இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். அவர் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 47 பந்துகளில் 74 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 போட்டிகளில் எப்போதுமே சிறப்பாக ஆடக்கூடியவரான ரெய்னா, இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் சிறப்பாக ஆடியது குறிப்பிடத்தக்கது. தனிநபராக நின்று ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவரான யுவராஜ் சிங் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதுதவிர கேப்டன் தோனியின் பார்மும் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், வேகப்பந்து வீச்சு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. முகமது சமியுடன் 2-வது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் அல்லது வருண் ஆரோன் இடம்பெறுவர்.
புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் வேகம் இல்லாததால் எதிரணி பேட்ஸ்மேன்கள் எளிதாக துவம்சம் செய்துவிடுகின்றனர். அதேநேரத்தில் வருண் ஆரோன் வேகமாக பந்துவீசினாலும், அதில் துல்லியமில்லை. எனவே கடைசிக் கட்ட ஓவர்களில் யாரை பந்துவீசச் செய்வது எனத் தெரியாமல் கேப்டன் தோனி தவிக்கிறார்.
பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் படுதோல்வி கண்டாலும் இன்று வரை கணிக்க முடியாத அணியாகவே உள்ளது. மூத்த பேட்ஸ்மேன்களான கம்ரான் அக்மல், சோயிப் மாலிக் ஆகியோர் இடம்பெற்றிருப்பது பாகிஸ்தானுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
கம்ரான் அக்மல், கேப்டன் முகமது ஹபீஸ், உமர் அக்மல், சோயிப் மாலிக், ஷாகித் அப்ரிதி, சோயிப் மசூத் என வலுவான பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது. கம்ரான் அக்மல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாதபட்சத்தில் பின்வரிசையில் களமிறங்கலாம்.
அந்த அணியில் இடம்பெற்றுள்ள 4 ஆல்ரவுண்டர்களில் அப்ரிதி, ஹபீஸ், மாலிக் ஆகிய 3 பேர் சுழற்பந்து வீச்சாளர்கள். மெதுவான ஆடுகளமான வங்கதேசத்தில் அவர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்ஃபான் காயம் காரணமாக விளையாடாத நிலையில் உமர் குல், சோஹைல் தன்வீர் ஆகியோரை நம்பியுள்ளது பாகிஸ்தான். சுழற்பந்து வீச்சில் சயீத் அஜ்மல், அப்ரிதி, முகமது ஹபீஸ் என வலுவான கூட்டணியைக் கொண்டுள்ளது பாகிஸ்தான். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறுவதும், சொதப்பலான பீல்டிங்கும் பாகிஸ்தானின் பலவீனமாக உள்ளது.
இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), வருண் ஆரோன், ஸ்டூவர்ட் ஃபின்னி, ஷிகர் தவண், ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா, அஜிங்க்ய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், சுரேஷ் ரெய்னா, முகமது சமி, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங்.
பாகிஸ்தான்: முகமது ஹபீஸ் (கேப்டன்), அஹமது ஷெஸாத், பிலவால் பட்டி, ஜுனைத் கான், கம்ரான் அக்மல், சயீத் அஜ்மல், ஷாகித் அப்ரிதி, ஷர்ஜீல் கான், சோயிப் மாலிக், சோயிப் மசூத், சோஹைல் தன்வீர், முகமது தல்ஹா, உமர் அக்மல், உமர் குல், ஜல்பிகர் பாபர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT