Last Updated : 04 Feb, 2014 10:45 AM

 

Published : 04 Feb 2014 10:45 AM
Last Updated : 04 Feb 2014 10:45 AM

சந்தோஷ் டிராபி: தமிழகம், கேரளம் தகுதி: 10 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம்

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் பிரதான சுற்றுக்கு தென் மண்டலத்தில் இருந்து தமிழகம், கேரளம் ஆகிய இரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தமிழகம் 4-0 என்ற கோல் கணக்கில் ஆந்திரத்தை வீழ்த்தி தென் மண்டல பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. முதல் பாதி ஆட்ட இடைவேளையின்போது 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த கேரளம் 2-வது பாதி ஆட்டத்தின் “இஞ்சுரி டைமில்” இரு கோல்களை அடித்து 3-2 என்ற கோல் கணக்கில் கர்நாடகத்தை வீழ்த்தி 2-வது இடத்தைப் பிடித்தது.

கர்நாடகம் முன்னிலை

68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதிச்சுற்று சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்றன. கடைசி நாளான திங்கள்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் கேரளமும், கர்நாடகமும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 25-வது நிமிடத்தில் எதிர்பாராதவிதமாக கர்நாடகத்தின் குர்னிலால் முதல் கோல் அடிக்க, அடுத்த 3-வது நிமிடத்தில் அந்த அணிக்கு 2-வது கோல் கிடைத்தது. ஸ்டீபன் வலது எல்லையில் இருந்து பந்தை “பாஸ்” செய்ய அதை கோலாக்கினார் சேவியர் விஜயகுமார்.

முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு 8 நிமிடங்களே (அதாவது 37-வது நிமிடம்) இருந்தவேளையில் பிரசூன் கடத்திய பந்தை கேரளத்தின் சிபின்லால் கோலாக்கினார். முதல் பாதி ஆட்டநேர முடிவில் கர்நாடகம் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

திருப்புமுனை

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் “இஞ்சுரி டைமுக்கு” முன்பு வரை கர்நாடகமே 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் “இஞ்சுரி டைமின்” 94-வது நிமிடத்தில் கேரளத்தின் சுர்ஜித் கோலடிக்க, ஸ்கோர் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. அதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது. இதன்பிறகு ஆக்ரோஷமாக ஆடியது கேரளம். 98-வது நிமிடத்தில் “மிட் பீல்டில்” இருந்து அற்புதமாக பந்தைக் கடத்திச் சென்ற கேரள ஸ்டிரைக்கர் உஸ்மான், இடது எல்லையில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தார். கோல் கம்பத்தின் அருகில் இருந்த சிபின்லால் அதை கோலாக மாற்ற கேரளம் 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.

கர்நாடகம் தரப்பில் குர்னிலால், சேவியர் விஜயகுமார் ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள் என்றால், கேரள அணியில் ஸ்டிரைக்கர்கள் கண்ணன், உஸ்மான், நடுகள வீரர்கள் அனீஷ், பிரசூன், சிபின்லால் ஆகியோர் அற்புதமாக ஆடினர்.

தமிழகம் வெற்றி

பின்னர் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆந்திரத்தை எதிர்கொண்டது தமிழகம். தமிழக அணியைப் பொறுத்தவரையில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த ஸ்டிரைக்கர் ரீகன் மற்றும் நடுகள வீரர் கார்த்திக், தடுப்பாட்டக்காரர் எடிசன் ஆகியோருக்குப் பதிலாக அமீருதீன், அசோக் குமார், மூர்த்தி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

தமிழக அணி ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது. இதனால் 11-வது நிமிடத்திலேயே தமிழகத்துக்கு கோல் கிடைத்தது. ஸ்டிரைக்கர் அமீருதீன் இந்த கோலை அடித்தார். இதையடுத்து 14-வது நிமிடத்தில் “மிட் பீல்டில்” இருந்த தமிழக கேப்டன் சுதாகரிடம் பந்து செல்லவே, அதை வேகமாக விரட்டிச் சென்ற சுதாகர் “10 யார்ட்” தூரத்தில் இருந்து துல்லியமாக கோல் அடித்தார்.

அடுத்த 2-வது நிமிடத்தில் சாந்தகுமார் கோல் கம்பத்தை நோக்கி தூக்கியடித்த பந்தை அற்புதமாக தலையால் முட்டி கோலடித்தார் ஸ்டிரைக்கர் அமீருதீன். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் தமிழகம் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அமீருதீன் ஹாட்ரிக்

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் தமிழக நடுகள வீரர் அசோக் குமார் கோல் கம்பத்தை நோக்கி பந்தை தூக்கியடிக்க, அதில் அமீருதீன் தனது 3-வது கோலை அடித்தார்.

இதன்பிறகு தமிழகம் தாக்குதல் ஆட்டத்தில் இறங்காமல் மிக மந்தமாக விளையாடியது. 63-வது நிமிடத்தில் தமிழக அணியில் சாந்தகுமாருக்குப் பதிலாக பிரவீண் ராஜா மாற்று ஆட்டக்காரராக களம்புகுந்தார். இதன்பிறகு ஸ்டிரைக்கர் அமீருதீனுக்கு அடிபடவே, அவருக்குப் பதிலாக ஜோபின் களமிறங்கினார். கடைசி நேரத்தில் தமிழகத்துக்கு ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பிரவீண் ராஜா பந்தை வெளியில் தூக்கியடிக்க அது வீணானது. இறுதியில் தமிழகம் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. தமிழக வீரர்களின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. ஆந்திரம் கோலடிப்பதற்கு தமிழக அணி ஒரேயொரு வாய்ப்பை மட்டுமே வழங்கியபோதும், அதையும் கோட்டைவிட்டது ஆந்திரம்.

இந்த வெற்றியின் மூலம் தமிழகம் 10 புள்ளிகளுடன் தென் மண்டல பிரிவில் முதலிடத்தைப் பிடித்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெறவுள்ள சந்தோஷ் டிராபி போட்டியின் பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றது. கேரள அணி 9 புள்ளிகளுடன் 2-வது அணியாக பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றது. கேரளத்திடம் தோல்வி கண்ட கர்நாடகம் பிரதான சுற்று வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

தோல்வியை சந்திக்காத தமிழகம்

தமிழக அணி தான் விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் வெற்றியையும், ஒரு டிராவையும் பதிவு செய்தது. கேரளம், அந்தமான், ஆந்திரம் ஆகிய அணிகளை வீழ்த்திய தமிழகம், கர்நாடகத்துடன் டிரா செய்தது. இதன்மூலம் இந்தப் போட்டியில் தோல்வியை சந்திக்காத அணி என்ற பெருமையைப் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x