Published : 24 Mar 2014 11:08 AM
Last Updated : 24 Mar 2014 11:08 AM
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் கடும் போராட்டத்துக்குப் பிறகு காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் முன்னாள் முதல் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட்டை தோற்கடித்தார். மழை காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தை 66 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார் நடால்.
வெற்றிக்கு பிறகு பேசிய நடால், “2012-லிருந்து இந்தப் போட்டி யில் விளையாடாத நிலையில் இப்போது மீண்டும் விளையாட வந்திருப்பது சிறப்பானது. எனது வருகையை தெரியப்படுத்த இதுபோன்ற ஒரு வெற்றியோடு தொடங்குவதைவிட சிறந்த வழி எதுவுமில்லை” என்றார்.
ஹெவிட்டுக்கு எதிராக தொடர்ந்து 6-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நடால், அடுத்ததாக உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை சந்திக் கிறார். இஸ்டோமின் தனது 2-வது சுற்றில் 6-7 (8), 6-0, 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டிமிட்ரி துர்சுனோவை தோற்கடித்தார்.
வாவ்ரிங்கா வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 6-0, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேனியல் ஜிமெனோ டிரேவரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் வென்று 18 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்த வாவ்ரிங்கா, அடுத்த செட்டை இழந்தார். அது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு மனரீதியாக சில ஏற்ற, இறக்கங்கள் இப் போதும் இருக்கின்றன. 2-வது செட்டில் நான் எதிர்மறையான எண்ணத்துடன் ஆடியது கொஞ்சம் முட்டாள்தனமானதுதான். எனினும் 3-வது செட்டை சிறப்பாகத் தொடங்கியதில் மகிழ்ச்சியே” என்றார்.
போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளவரான செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் 7-6 (5), 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஸ்டீபன் ராபர்ட்டையும், போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருப்பவரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 6-7 (5), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான டொனால்டு யங்கையும் தோற்கடித்தனர்.
4-வது சுற்றில் ஜோகோவிச்
போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து 3-வது சுற்றில் விளையாடவிருந்த ஜெர் மனியின் புளோரியன் மேயர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.
போராடி வென்ற செரீனா
நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கடும் போராட்டத் துக்குப் பிறகு 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவைத் தோற் கடித்தார். இந்த ஆட்டத்தின் 3-வது செட்டில் 5 கேம்கள் முடிந்திருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
மியாமி மாஸ்டர்ஸில் 7-வது பட்டம் வெல்லும் கனவில் இருக்கும் செரீனா, இந்தப் போட்டியில் 63-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இங்கு இதுவரை 70 போட்டிகளில் விளை யாடியிருக்கும் செரீனா 7-ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளார்.
கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான மரியா ஷரபோவாவும் கடும் போராட்டத்துக்குப் பிறகே தனது 3-வது சுற்றில் வெற்றி கண்டார். அவர் 6-4, 6-7 (7), 6-2 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவாவைத் தோற்கடித்தார். இந்த போட்டியில் ஷரபோவா 8 டபுள் பால்ட் தவறுகளை செய்தது குறிப்பிடத்தக்கது.
தகுதி நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வான் டேவெக் 5-7, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் 16-ம் நிலை வீராங் கனையான ஆஸ்திரே லியாவின் சமந்தா ஸ்டோசருக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
பூபதி ஜோடி தோல்வி
ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி-தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஜோடி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஜோடி 4-6, 6-4, 6-10 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் பேயா-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானக் ஜோடியும் முதல் சுற்றோடு வெளியேறிவிட்ட நிலையில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மட்டுமே 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர், பாகிஸ்தானின் குரேஷியுடன் இணைந்து விளையாடி வருகிறார். இந்த ஜோடி தங்களின் 2-வது சுற்றில் கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன் கேபல்-ராபர்ட் ஃபராஹ் ஜோடியை சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT