Published : 13 Jan 2014 12:00 AM
Last Updated : 13 Jan 2014 12:00 AM
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 128 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் குவித்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் குக் 4 ரன்களிலும், ஜோ ரூட் 3 ரன்களிலும் வெளியேற, இயான் பெல்-கேரி பேலன்ஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தது. பெல் 56 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பேலன்ஸுடன் ஜோடி சேர்ந்தார் இயோன் மோர்கன். பேலன்ஸ் நிதானமாக ஆட, மறுமுனையில் வேகமாக ஆடிய மோர்கன் 46 பந்துகளில் அரைசதம் கண்டார். இது அவருடைய 20-வது அரைசதமாகும். அரைசதம் கண்டதைத் தொடர்ந்து மோர் கன் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து போபாரா களம்புகுந்தார். இதனிடையே கேரி பேலன்ஸ் 69 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு போபாரா 17, பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய பேலன்ஸ் 79 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 96 பந்துகளில் 6 பவுண்டரி களுடன் 79 ரன்கள் எடுத்தார்.
கடைசிக் கட்டத்தில் ஜோஸ் பட்லரும், டிம் பிரெஸ்னனும் அதிரடியில் இறங்க, இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப் புக்கு 269 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 34, பிரெஸ்னன் 9 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 163
270 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச்-டேவிட் வார்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. கேரி பேலன்ஸ் கோட்டைவிட்ட கேட்ச்சால் ஆட்டமிழப்பதில் இருந்து (8 ரன்களில்) தப்பிய ஆரோன் பிஞ்ச், பின்னர் வெளுத்து வாங்கினார். இதனால் அவர் 47 பந்துகளில் அரைசதம் கண்டார்.
மறுமுனையில் டேவிட் வார்னர் 22 ரன்களில் இருந்தபோது விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார். மிக தாழ்வாக சென்ற பந்தைப் பிடித்த ஜோஸ் பட்லர், நடுவரிடம் அவுட் கேட்க, வார்னர் வெளியேறினார். ஆனால் டி.வி. ரீபிளேவில் பார்த்தபோது அது அவுட் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து பவுண்டரி எல்லையை நெருங்கிவிட்ட வார்னரை அழைத்து மீண்டும் பேட் செய்ய வைத்தனர்.
வார்னரும், பிஞ்சும் வேகமாக விளையாட 18-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. இதனிடையே டேவிட் வார்னர் 59 பந்துகளில் அரைசதம் கண்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய வார்னர் 72 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த ஷேன் வாட்சன் டக் அவுட் ஆக, கேப்டன் கிளார்க் களம்புகுந்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஆரோன் பிஞ்ச் 108 பந்துகளில் சதமடித்தார். அவர் 128 பந்துகளில் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, கேப்டன் கிளார்க் 42 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில் 45.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஜார்ஜ் பெய்லி 17, கிளன் மேக்ஸ்வெல் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆரோன் பிஞ்ச் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது ஆஸி. 2-வது ஒருநாள் ஆட்டம் வரும் 17-ம் தேதி பிரிஸ்பேனில் நடை பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT