Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM
19 வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது நடப்பு சாம்பியனான இந்தியா.
துபையில் சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் பெய்ன்ஸ் 3 ரன்களிலும், ஹெர்வாத்கர் 2 ரன்களிலும், சஞ்ஜூ சாம்சன் ரன் ஏதுமின்றியும், ஆர்.கே.புல் 7 ரன்களிலும் ஆட்டமிழக்க, 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.
இதையடுத்து கேப்டன் விஜய் ஸோலுடன் இணைந்தார் தீபக் ஹூடா. விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மத்தியில் களமிறங்கிய இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 24.4 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்தது. 85 பந்துகளைச் சந்தித்த விஜய் ஸோல் 3 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தீபக் ஹூடாவுடன் இணைந்தார் சர்ஃப்ராஸ் கான்.
இந்தியா 147 ரன்களை எட்டியபோது தீபக் ஹூடா துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். 99 பந்துகளைச் சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு சர்ஃப்ராஸ் கான் 46 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்க்க, இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் பிஞ்ச் 10, பின்னர் வந்த ஹிக்கின்ஸ் 1, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டாட்டர்சால் 23 ரன்களில் வெளியேறியபோதும், 5-வது வீரராக களமிறங்கிய டக்கெட் 64 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சேர்த்து இங்கிலாந்துக்கு கை கொடுத்தார். பின்வரிசையில் கிளார்க் 42 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு ஜோன்ஸும், சயாரும் சிறப்பாக ஆடினர். இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி 7 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹூடா வீசிய 49-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஜோன்ஸ் பவுண்டரியை விளாச, மிலிந்த் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சயார் பவுண்டரி அடித்து இங்கிலாந்துக்கு வெற்றி தேடித்தந்தார். இங்கிலாந்து அணி 49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT